விசாரணைகளை எதிர்கொள்ள தயார் – ரிஷாட் தேரர்களிடம் தெரிவிப்பு
எந்த விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க தான் தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மகாநாயக்க தேரர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டியில் இடம்பெற்றது. இதன்போதே தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை துடைத்தெறிவதற்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென தெரிவித்தார்.
குண்டுத் தாக்குதல் நடந்த அன்றைய தினமே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆன்டகையைச் சந்தித்து, தாம் உறுதி வழங்கியதாகவும் அன்று தொட்டு இன்று வரை இந்த பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு தமது சமூகம் உதவியதாகவும் குறிப்பாக சாந்தமருதில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகள் தம்மை காட்டிக்கொடுக்க வேண்டாமென கோடிக்கணக்கான பணத்தினை கொடுப்பதற்கு தயாராகியிருந்தபோதும் தமது மக்கள் அவர்கள் இருந்த இடத்தை காட்டிக்கொடுத்து நாட்டிற்கு உதவி புரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்றும் இவ்வாறான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை தாம் ஒருபோதும் முஸ்லிம்கள் என சொல்லப்போவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இந்த பயங்கரவாதத்திற்கு முற்றுமுழுதாக எதிரானவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் உரிய முறையில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றவேளை, சில அரசியல்வாதிகள் தமது குறிக்கோளை அடைந்துகொள்வதற்காக தனக்கெதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Post a Comment