Header Ads

test

முன்னணி, ஈபிஆர்எல்எவ் கூட்டிற்குள் வர முட்டுக்கட்டை!

நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அணியும் களமிறங்கவுள்ளநிலையில் அங்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைவதை தடுக்கவும் தங்களிற்கு துண்டுபோட்டுக்கொள்ளவும் முன்னாள் அமைச்சர் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.

முன்னதாக தமது கூட்டில் ஈபிஆர்எல்எவ் தரப்பினை இணைத்துக்கொள்ளக்கூடாதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் போன்றோர் போர்க்கொடி தூக்கியதில் பொ.ஜங்கரநேசன் தரப்பே இருப்பதாக முதலமைச்சரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன்னை அரசியலில் அறிமுகப்படுத்திய ஈபிஆர்எல்எவ் கட்சியை கைவிட்டு அமைச்சு பதவியினை ஜங்கரநேசன் பெற்றிருந்தார்.அத்துடன் ஈபிஆர்எல்எவ்வுடன் உறவையும் துண்டித்திருந்தார்.தற்போது வரை நாய்கடி பூனைகடியாகவே ஈபிஆர்எல்எவ் உடனான உறவு அவருக்குள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் கூட்டினுள் மீள ஈபிஆர்எல்எவ் கட்சியை வந்துவிடாமல் தடுப்பதில் முன்னாள் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தரப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரனை பயன்படுத்துவதாக நெருங்கிய செயற்பாட்டாளர்கள் சந்தேகம் வெளியிட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கிடைத்துள்ள தேர்தல் சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாதென்பதில் முன்னாள் முதலமைச்சர் உறுதியாகவுள்ளார்.சுயேட்சையாகவேனும் தேர்தலை எதிர்கொள்ள அவர் சிந்தித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட பிரதான தரப்புக்கள் இணைந்து பயணிக்க பேச்சு நடத்த வருமென அவர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்.

இந்நிலையிலேயே முன்னாள் வடமாகாண அமைச்சர்களான பொ.ஜங்கரநேசன் மற்றும் அனந்தி ஆகியோர் தமது கதிரைகளை அங்கு போட்டு உட்கார்வதற்கான முனைப்பில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர். 

இதன் பிராகரம் வடக்கின் ஐந்து மாவட்டங்களிற்குமான வேட்பாளர் தெரிவில் முதலமைச்சர் அணி ஈடுபட்டுள்ளதான கதைகள் இத்தரப்புக்களால் தற்போது அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் தரப்பினை தனிப்பாதையில் செல்ல வைக்க அவர்கள் முற்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் கடந்த 9ம் திகதி திடீரென கலைக்கப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்த வர்த்த மானியில், அடுத்த தேர்தல் ஜனவரி 5ம் திகதி இடம்பெறுமென்றும், வேட்புமனு தாக்கல்கள் இம்மாதம் 19ம் திகதியில் இருந்து 26ம் திகதி வரை இடம்பெறுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிராக நாளை உயர்நீதிமன்றத்தில் பல ஐ.தே.க, ஜே.வி.பி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சில தனிநபர்கள் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் வடமாகாணசபை தேர்தலை எதிர்பார்த்து காத்திருந்த முன்னாள் முதலமைச்சர் தரப்பிற்கு எதிர்பாராத விதமாக நாடாளுமன்ற தேர்தல் வந்துள்ளது.

ஆயினும் இத்தேர்தலை எதிர்கொள்வதன் மூலம் அடுத்துவரும் தேர்தல் ஆதரவு தொடர்பில் நாடி பிடித்து பார்க்க முதலமைச்சர் தரப்பு முற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதுள்ள முன்னாள் முதலமைச்சர் அனுதாப அலையினை தாங்கள் அறுவடை செய்துகொள்ளவே ஜங்கரநேசன்,அனந்தி தரப்பு உள்ளக குழப்பங்களில் ஈடுபடுவதாக ஆதரவாளர்கள் தரப்பில் சந்தேகிக்கப்படுகின்றது.

தற்போதைய சூழலில் வெற்றியினை எட்டக்கூடிய தரப்பாக கூட்டமைப்பிற்கு வெளியேயுள்ள முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் தரப்பின் தலைமைகளை வெளியே தள்ளிவிட்டு தாங்கள் கதிரைகளை பெற இத்தரப்புக்கள் மும்முரமாகியுள்ளன.

குறிப்பாக இந்தியா உள்ளிட்ட தரப்புக்கள் கஜேந்திரகுமார்,சுரேஸ் தரப்பினை தவிர்த்து இத்தரப்புக்களின் வருகை தொடர்பில் ஆதரவளிக்க உறுதி மொழிகளை வழங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

எனினும் தனது அடுத்து அரசியல் பயணத்திற்கான வெற்றிகரமான பாதையை முன்னாள் முதலமைச்சர் வகுத்தே நடைபயில்வார் என்கின்றன அவரது தரப்புக்கள்.

No comments