Header Ads

test

போராட்டம் தொடரும்:அரசியல் கைதிகள் அறிவிப்பு?

அநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகள் தொடர்பில் நேற்றைய தினம் எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருடன் நடத்திய பேச்சில் எடுக்கப்பட்ட முடிவினை போராட்டகாரர்கள் நிராகரித்துள்ளனர். முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 8 பேரையும், வௌ;வேறு கட்டங்களில் புனர்வாழ்வுக்கு அனுப்பி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தை, சட்டமா அதிபர் நேற்று (02) வெளியிட்டாரென, எம்.ஏ.சுமந்திரன்; தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் தலதா அத்துகோரள, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சுமந்திரன் எம்.பி, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர், ஏற்கெனவே மேற்கொண்டிருந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டபடியே, இக்கலந்துரையாடல் நீதியமைச்சில் இடம்பெற்றிருந்தது. இதில், நீதியமைச்சர், சுமந்திரன் எம்.பி, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அநுராதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகள் தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது.

முதலில் போராட ஆரம்பித்த 8 பேரில் 2 பேர், ஏற்கெனவே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டவர்கள் என்பதால், அவர்களை உடனடியாகப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, அதன் பின்னர் விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.

ஏனையோரில் 3 பேர் தொடர்பான வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில், குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொள்வார்களாயின், அவர்களையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தையும், சட்டமா அதிபர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இவர்களில் ஒருவர் மீதான வழக்கின் போது, குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு, குறித்த நபரின் சட்டத்தரணியூடாக, அரச வழக்குத் தொடுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அது தொடர்பான விவரத்தை, அரச வழக்குத் தொடுநர், சட்டமா அதிபருக்கு வழங்கியதும், அது உடனடியாகவே சட்டமா அதிபரால் அங்கிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சியுள்ள 3 பேரின் வழக்குகளை, வவுனியாவுக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும் நிலையில், அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுவதற்கான சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது எனவும், அவர்களின் வழக்கின் முடிவைப் பொறுத்து, அவர்களையும் புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுதலை செய்ய முடியுமெனவும், இணக்கப்பாடு காணப்பட்டது.

அநுராதபுரத்தில் போராடிக் கொண்டிருக்கும் 12 பேர் தவிர, வழக்குகள் இன்னமும் முடிவுறாத நிலையில், 42 அரசியல் கைதிகள் காணப்படுகின்றனர் எனவும், அவர்களின் வழக்கு நிலைமைகளைத் தொடர்ந்து, அவர்களுக்கான புனர்வாழ்வு வழங்கப்படுமெனவும், அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவரெனவும், இதன்போது உறுதிமொழி வழங்கப்பட்டது. இவர்களின் வழக்குகளை, இவ்வாண்டுக்குள் முடிக்கும் வகையில், துரிதப்படுத்துவதற்கும், இதன்போது உறுதிமொழி வழங்கப்பட்டது.

இவர்களில் நால்வர் தொடர்பான வழக்குகள், இச்சந்திப்புக்குப் பின்னர், நேற்று முடிவுக்கு வந்திருந்தன. எனவே, இன்னும் 38 பேரே, இப்பட்டியலில் உள்ளனர்.
இவர்களைத் தவிர, மேலும் 55 பேர், வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு, குற்றவாளிகளாக நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள் என்ற நிலையில், அவர்களின் விடுதலை தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரம் காணப்படுகிறது. எனவே, இது தொடர்பான அரசியல் முடிவொன்றை, ஜனாதிபதி எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக, இன்று (03) இடம்பெறவுள்ள, வடக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நிறைவடைந்ததும், ஜனாதிபதியிடம், எதிர்க்கட்சித் தலைவரும் தானும் வலியுறுத்தவுள்ளதாக, சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

எனினும் வழக்கு விசாரணைகளை இவ்வருட இறுதியினுள் முடிப்பதாக வழங்கப்படுவது போன்று பலமுறை உறுதி மொழிவழங்கப்பட்டுள்ளது.ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.பொய்யான குற்றத்தை ஒப்புக்கொண்டால் விதிக்கப்படும் தண்டனை தொடர்பில் அச்சமுள்ளது.அதேபோன்று வேண்டுமென்றே சட்டமாஅதிபர் திணைக்களம் அரசியல் கைதிகள் விவகாரத்தை இழுத்தடிக்கின்ற நிலையில் தீர்க்கமான முடிவே தேவையென தெரிவித்துள்ள அரசியல் கைதிகள் தமது போராட்டம் தீர்க்கமான முடிவு எட்டப்படும் வரை தொடருமென் இன்று அறிவித்துள்ளனர்.

No comments