Header Ads

test

பள்ளிமுனையினை விடுவிக்க மறுக்கும் கடற்படை!



வடமாகாணம் மன்னார் பள்ளிமுனை மீனவர்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள இலங்கைக் கடற்படையினருக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது மனுதாரரான பள்ளிமுனை தமிழ் மீனவர்களுடன் எவ்வித இணக்கப்பாட்டிற்கும் வரமுடியாதென இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பள்ளிமுனை மீனவர்களின் இருப்பிடங்களையும் அவர்களுக்கு செந்தமான காணிகளையும் இலங்கை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், தமது காணிகளை விடுவித்து தருமாறு வலியுறுத்தி கடற்படையினருக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதிமன்றில் மன்னார் பள்ளிமுனை தமிழ் மீனவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை மன்னார் மாவட்ட நீதிபதி சரவணராஜா முன்னிலையில்  செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 
 
இந்த விசாரணையின்போதே இலங்கைக் கடற்படையினர் மன்னார் நீதிமன்றில் இவ்வாறு கூறியுள்ளனர்.

மன்னார் பள்ளிமுனை மீனவக் கிராமத்தை சேர்ந்த 21 தமிழ் மீனவ குடும்பங்களின் வீடுகளையும் அதனோடு இணைந்த அவர்களின் பரம்பரைக் காணிகளையும் 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரும் இலங்கை பொலிஸரும் கூட்டாக ஆக்கிரமித்திருந்தனர்.
பின்னர் 1995 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த பிரதேசங்களில் இருந்து வெளியேறினர். ஆனாலும் இலங்கைப் பொலிஸார் தொடர்ந்தும் குறித்த காணியில் நிலைகொண்டிருந்தனர்.
இலங்கைப் பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினரும் பள்ளிமுனை மீனவர்களுக்கு சொந்தமான குடியிருப்புப் பகுதிகளில் முகாமிட்டிருந்தனர்.
ஆனாலும், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் தமிழ் மக்களின் காணிகள் மற்றும் அவர்களின் இருப்பிடங்களிலிருந்து இலங்கைப் பொலிஸார் வெளியேறினர்.
இந்த நிலையில், முற்றுமுழுதாக தமிழ் மீனவர்களின் காணிகளையும் வீடுகளையும் முழுமையாக ஆக்கிரமித்த இலங்கைக் கடற்படையினர் அப்பகுதியை பாரிய கடற்படைதளமாக மாற்றினர். அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்தே பள்ளிமுனை மீனவர்கள் தமது பரம்பரை வதிவிடங்களையும் காணிகளையும் விட்டு வெளியேறுமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றில் 11.02.2013 அன்று இலங்கை கடற்படையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையே இன்று 32 ஆவது தவணையாக மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அரசாங்கத்துக்குச் சொந்தமான, தற்போது இலங்கைக் கடற்படையினர் நிலை கொண்டுள்ள முகாமிற்கு அருகாமையில் உள்ள பிறிதொரு காணியை இலங்கைக் கடற்படைக்கு வழங்குவதற்கு கடந்த விசாரணையின்போது மனுதாரர் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
ஆனாலும் முகாம் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமான காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கவில்லை என வழக்கின் எதிராளிகளான இலங்கை கடற்படையினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
முகாம் அமைக்கப்பட்டுள்ள காணி சட்டப்படி இலங்கை அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டது. ஆகவே மனுதாரரான தமிழ் மீனவர்களோடு எவ்வித இணக்கப்பாட்டிற்கும் வரவேண்டிய அவசியம் இல்லையென கடந்த விசாரணையின்போது இல்ங்கைக் கடற்படையினர் கூறியிருந்ததனர்.
இதனை பள்ளிமுனை மீனவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நிறஞ்சன் இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆகவே இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் மன்னார் மாவட்ட நீதிபதி சரவணராஜா இந்த வழக்கை எதிர்வரும் 13 ஆம் திகதி வியாழக்கிழமை வரை ஒத்திவைத்தார்.
மன்னார் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மீனவர்கள் மற்றும் இலங்கைக் கடற்படையின் சம்மதத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மன்னார் பிரதேச செயலகம் 07.12.2017 அன்று அளவீடு செய்திருந்தது.
மன்னார் நகருக்குச் சமீபமாகவுள்ள பள்ளிமுனை பிரதேசத்தில் சுமார் இரண்டரை ஏக்கர் காணியில் 21 மீனவ குடும்பங்களின் வீடுகளுடன் காணிகளையும் இலங்கைக் கடற்படை ஆக்கிரமித்துள்ளது.
இந்தக் காணிகளை பள்ளிமுனை மீனவக் குடும்பங்களிடம் கையளிக்கும் நோக்கிலேயே 07.12.2017 அன்று காணி அளவீடுகள் மன்னார் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுமிருந்தன.
இந்த நிலையிலேயே காணிகளை கையளிக்க முடியாதெனவும் இலங்கை அரசாங்கம், சட்டத்திற்கு அமைவாக சுவீகரித்துள்ளதாகவும் இலங்கைக் கடற்படையினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளமை தொடர்பாக பள்ளிமுனை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

No comments