Header Ads

test

நந்திக்கடல்தான் அரசியல் தீர்வு என்றால் மௌனிக்கப்பட்டவையே தீர்வைக்காண வேண்டுமா? பனங்காட்டான்

சிங்களப் படைகளும் சிங்களக் குடியேற்றங்களும் தமிழ் மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூறையாடலை தடுத்து நிறுத்தும் வல்லமை தமிழ்த் தலைமைகளிடம் காணப்படவில்லை. இந்நிலையில் நந்திக்கடல்தான் தமிழருக்கான அரசியல் தீர்வானது என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அப்படியானால் அங்கு மௌனிக்கப்பட்டவைதான் உண்மையான தீர்வைக்காண வேண்டுமா?

இலங்கையின் ஜனாதிபதி புதுமையான ஒரு கண்டுபிடிப்பை இந்த வாரம் வெளிப்படுத்தியுள்ளார். தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பங்கேற்ற திருமலை நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சகல அரசாங்கங்களும் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளன என்பதே ஜனாதிபதியின் கண்டுபிடிப்பு.
இவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினராக 1969ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அங்கம் வகிக்கிறார். இந்தக்கட்சி 36 ஆண்டுகள் இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளது.

சந்திரிகா மற்றும் மகிந்த ஆகியோர் ஜனாதிபதிகளாகவிருந்த காலத்தில் கட்சியின் செயலாளராக பதவி வகித்தவரும் இவரே. இவரது கூற்றின்படி பார்க்கின், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், தமிழர் பிரதிநிதிகளை தங்கள் இருப்புக்காகவே பயன்படுத்திக்கொண்டன என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது.

தற்போது இவர் ஜனாதிபதி பதிவி வகிக்கும் நல்லாட்சி என்று சொல்லப்படும் அரசாங்கமும் அதனையே செய்கிறது என்றால் அது தவறாக இருக்கமுடியாது. அப்படியானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை கெட்டித்தனமாக தாங்கள் ஏமாற்றி வருவதாகவும், அதற்காகவே சம்பந்தனுங்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது என்பதையும், சம்பந்தன் முன்னிலையிலேயே எடுத்துக்கூறும் துணிச்சல் ஜனாதிபதிக்கு இப்போது எற்பட்டுவிட்டது.

திருமலை மாவட்டத்துக்கு நீண்ட காலமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர் இல்லையென்பதால் இம்மாவட்டத்தின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லையென்றும் ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்தக் கூற்றின் பின்னணியும் நோக்கமும் என்னவாக இருக்கலாம்?

அமைச்சர் மனோ கணேசன் ஒரு தடவை குறிப்பிட்டதுபோல சம்பந்தனுக்கு அமைச்சர் பதவி வழங்க ஜனாதிபதி விரும்புகிறாரா?

அல்லது சம்பந்தனின் சிபார்சில் கூட்டமைப்பில் ஒருவரை அமைச்சராக நியமிப்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்குமா?

அப்படியானால், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் குறிப்பிட்டது போன்று, சுமந்திரனை அமைச்சராக நியமிக்கும் உள்நோக்கம் மெதுவாகக் கசியவிடப்பட்டுள்ளதா?
மலிந்தால் சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும்.

ஜனாதிபதி தெரிவிக்கும் அபிவிருத்தி என்பது அரசியல் தீர்வு முக்கியமற்றதா என்ற கேள்வியை எழுப்புகிறது. அரசியல் வழிகாட்டிக்குழு தயாரித்த புதிய அரசியலமைப்பு இப்போதைக்கு நிறைவேறும்போலத் தெரியவில்லை.

மகிந்த தலைமையிலான எதிரணி ஏற்கனவே முன்மொழிந்த திருத்தங்கள் அல்லது இணைப்புகள் சேர்க்கப்படுமானால், புதிய அரசியலமைப்பு தேவையற்றதாகி விடலாம்.

ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதர் ரணிலுக்குமிடையிலான பனிப்போர் இப்போது பகிரங்கப் போராகியுள்ளது.

அர்ஜுன் மகேந்திரனின் விவகாரத்தில் ஆரம்பமான இப்போர், இப்போது மைத்திரி மற்றும் கோதபாய மீதான கொலை முயற்சியில் வந்துள்ளது.

ஜனாதிபதி கதிரையைக் கைப்பற்றுவதற்கு ரணில் எடுத்த முயற்சி இதுவென மகிந்த அணியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் பிரதிபலிப்பாக காவற்துறையிலும் ராணுவத்திலும் சில தலைகள் உருள ஆரம்பித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலரும் பதவியிறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
இவ்வாறான பலமற்ற கூட்டாட்சி அரசியல் தீர்வுக்கான பாதையை விரைவில் மறந்துவிடும்.
மறுபுறத்தில், அபிவிருத்தி என்பதற்கு சிங்களக் குடியேற்றம்மென்று அரசாங்கம் வரையறை செய்துள்ளதை அப்பட்டமாகப் பார்க்க முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் காரைநகரிலிருந்து கரையோரமாக முல்லைத்தீவு, திருமலையூடாக மட்டக்களப்பு தாண்டிய கரையோரம் முழுவதும் முப்படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


இரண்டு காரியங்களை துரிதமாக நிறைவேற்ற இது உதவுகிறது. 
தமிழர் காணிகளை சிங்களப் படையினர் இருப்புக்காக அபகரிப்பதும், சிங்களக் குடியேற்றங்களால் தமிழ் மண்ணைச் சீரழிப்பதுமே இந்த இரட்டை இலக்கு.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது முப்படையினர் வசம் 86,000க்கும் அதிகமான ஏக்கர் காணி இருப்பதாக யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் (நிச்சயமாக இந்த நிலப்பரப்பு மேலும் பல்லாயிரம் அதிகமாகவே இருக்கவேண்டும்).
இதற்கும் அப்பால் வன்னி மாவட்டங்கள் மற்றும் திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களல் மேலும் எத்தனை ஆயிரம் படையினர் வாழ்;ந்துகொண்டு இருக்கின்றனர் என்ற புள்ளிவிபரம் ஒருபோதுமே தெரியவராது.

இவ்வாறான படையினர் பெருக்கம் அரசாங்கத்தின் சிங்களக் குடியேற்றத்துக்கு எவ்வாறு பலமாக இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். 1947ம் அண்டு இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரஇ; இலங்கை சட்ட சபையில் 1941ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 15 வருடங்கள் காணி விவசாய அமைச்சராக பதவி வகித்தவர் டி. எஸ். சேனநாயக்க.

கல்லோயா அபிவிருத்தி திட்டத்தை உருவாக்கி முதலாவது சிங்களக் குடியேற்றமாக 250,000 சிங்களவர்களை குடியேற்றியவர் இவரே. எனவே தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தின் பிதாமகர் என இவரைக் குறிப்பிடலாம்.

“வானம் பொழியும் மழையின் ஒரு துளிகூட கடலுக்குச் செல்லக்கூடாது. அது மனித வளத்துக்குப் பயன்பட வேண்டும்” என்ற பராக்கிரம மன்னனின் கூற்று, டி. ஸ். சேனநாயக்கவின் சிங்களக் குடியேற்ற சுலோகமாக அமைந்தது.

1947ல் இலங்கையின் முதலாவது பிரதமராக இவர் பதவியேற்ற போது, தமது மகன் டட்லி சேனநாயக்கவை தாம் முன்னர் வகித்த காணி விவசாய அமைச்சராக நியமித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தினார்.

அடுத்து வந்த மூன்று அரசாங்கங்களில் 17வருடங்கள் தொடர்ந்து காணி, நீர்ப்பாசன அமைச்சராகவிருந்த சி.பி.டி. சில்வா பொல்லநறுவ மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முன்னைய அரசாங்கங்களின் சிங்களக் குடியேற்றங்களை வேகப்படுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டம் பொல்லநறுவையின் எல்லையில் அமைந்திருப்பதால்இ மட்டக்களப்பில் சிங்களக் குடியேற்றம் அரசாங்கத்துக்கு இலகுவாயிற்று.

ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஒரு தசாப்தத்திற்கு மேலான ஆட்சிக்காலத்தில் காமினி திசநாயக்க மகாவலி அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தார். இவ்வேளை ‘பி’ திட்டம் உருவாக்கப்பட்டு மகாவலி திசைதிருப்பத்தின் கீழ் தெற்கிலிருந்து ரயில்களிலும், லொறிகளிலும் சிங்களவர் கொண்டுசென்று குடியேற்றப்பட்டனர்.

மகிந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் பரம்பரையாக தாங்கள் வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டது மட்டுமன்றி, அவர்களின் நிலபுலன்களும், ஆதார வளமான கால்நடைகளும் தீயிட்டு பொசுக்கப்பட்டன.

1977 முதல் 2015 வரையான காலத்தில் தமிழர் தாயகத்தை பிரிப்பதற்காக மணலாறு, நாயாறு பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களின் காணிகளில் சிங்களவர் குடியேற்றப்பட்டனர். அத்துடன் தமிழ் கிராமங்களுக்கும் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டன (மணலாறு என்பது வெலிஓயா ஆனது).

தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காகவே மகாவலி அபிவிருத்திச் சபை எல்இ ஜே மற்றும் கே என்ற பெயர்களில் புதிய வலயங்களை உருவாக்கியது.
இவ்விடங்களிலேயே இப்போது சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 34 தமிழ்க் கிராமங்கள் பறிபோகவுள்ளன.
கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் சிங்கள ஆக்கிமிப்பு இரவு பகலாக இடம்பெறுகிறது. தொல்லியல் திணைக்களமும், கனிவளத் திணைக்களமும் இதற்கு பக்கபலமாக நின்று இயங்குகின்றன.

2009ல் போர் முடிந்தபின்னர் மட்டும் 6,000 சிங்களக் குடும்பங்கள் இப்பிரதேசங்களில் குடியேற்றப்பட்டுள்ளன.

இவர்களுள் பெருந்தொகையானோர் மீனவர்கள். இவர்களுக்கு மகாவலி அதிகாரசபையால் காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுவருகிறது. சுமார் 3,000 மில்லியன் ரூபா இதற்கென அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அத்துமீறலால் மண்ணையும் கடலையும் நம்பி வாழும் இப்பகுதி மக்கள் அகதிகளாகவும், அநாதைகளாகவும் ஆக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

அபிவிருத்தியென்பது தமிழர் தாயகத்தைப் பொறுத்தளவில் சிங்கள மண்ணாக மாற்றப்படுவது என்பதாயிற்று.

இவ்வாறான நெருக்கடி நிலையில் தமிழ் மக்களுக்கு நந்திக்கடலில் அரசியில் தீர்வு வழங்கப்பட்டுவிட்டது என்று சிங்களத் தேசியவாதியான பேராசிரியர் சந்தன ஜெயகமன கூறியுள்ளார்.

ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பான நிகழ்வொன்றில் உரையாற்றிய இவர் தம்மை உலக தேசப்பற்றுள்ள இலங்கையர் பேரவையின் பிரதிநிதியென அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதற்கு தமிழ் தேசப்பற்றுள்ள நாட்டுப்பற்றாளர்களின் பதில் என்ன?
மௌனிக்கப்பட்டவைதான் தமிழருக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டுமா?

No comments