Header Ads

test

என்ன செய்ய போகின்றோம்?

தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் இலங்கை அரசின் குடியேற்றங்கள்,ஆக்கிரமிப்புக்களை கேள்விக்குள்ளாக்கி முகநூலில் தமிழர் உணர்வாளர் ஒருவர் எழுதியுள்ள பதிவு
நாயாற்றில் சுமார் 400 தொடக்கம் 500 வரையான தென்னிலங்கை சிங்கள குடும்பங்கள் தற்காலிக மீன்பிடித்தொழிலுக்காக பருவகாலத்தில் வந்திறங்குகின்றார்கள்.
கடற்கரையில் வாடி அமைப்பதற்கு குறித்த பிரதேச செயலகத்தின் முறையான அனுமதி பெறப்படல் வேண்டுமென்று சட்டமிருக்க, எந்த அனுமதியுமில்லாத சிங்கள மீனவர்களின் வாடிகள் நாயாறு கரை முழுவதும் நிரம்பியிருக்கும்.
நாயாற்றின் - ஆழ்கடலையும், நீரேரியையும் இணைக்கும் தொடுப்பில் பரந்தளவிலான இலங்கை கடற்படை முகாமொன்றுண்டு. 

உல்லாச விடுதியோடு கூடிய இந்த கடற்படை முகாம் தான், தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிக்கான காப்பரண்.


மாத்தளன் தொடங்கி கொக்குளாய் வரை முல்லைத்தீவின் கடல்வளமுடைய ஆழக்கடலில் மரபுக்குரிய மீன்பிடிமுறைகள் பலப்பல கட்டுப்பாடுகளுடன் கூடிய அமைப்பொழுங்கை உடையன.

கடல்வளத்தை நீடித்து பேணும்வகையில், மீன்பிடிமுறைகளும் - அறுவடை பருவக்காலங்களும் இப்பிரதேசத்துக்கு தனித்துவமான முறையில், முல்லைத்தீவின் வெவ்வேறு பாடுகளுக்குரிய மீனவக்குடிகளால் பின்பற்றப்படுவன. 

தமக்குரிய கடல் வளம், தேசிய கடல்வழி மீன்பிடி சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதை முல்லைத்தீவின் பூர்வீக மீனவர்கள் எதிர்க்கின்றார்கள்.


ஆழ்கடல் தொழில், இலங்கையர்கள் யாவருக்கும் பொதுவானதென்று சட்டமும் - சட்டக்காவலர்களும் வகுப்பெடுக்கிறார்கள். 

பருத்தித்துறை மீனவனோ - முல்லைத்தீவு மீனவனோ இந்த சட்ட ஏற்பாட்டை பயன்படுத்திக்கொண்டு, நீர்கொழும்புக்கோ அம்பாந்தோட்டைக்கோ போவதில்லை, போகவும் முடியாது.


ஆனால், வடகீழ் பருவப்பயிற்சி மழைக்கு முன்னால், கிடைக்கும் பெருத்த மீன்அறுவடையை பங்குபோட தென்னிலங்கை சிங்கள மீனவர்கள், வடக்கு கிழக்கின் கடலுக்குள்ளும், கரையோரத்தினுள்ளும் அத்துமீறுவதற்கு, ஆயுதப்படைகளும் - காவல்துறையும் - திணைக்களங்களும் துணைபோகிறார்கள் என்பது வடபகுதி மீனவர்களின் ஒருமித்த குற்றச்சாட்டு!

பருத்தித்துறை கடலில் ரோலர் மீன்பிடியையும், 
ஆழியவளையின் கடலட்டை தொழிலையும், 
அளம்பிலில் டோராவலைகளையும், 
கொக்குளாய் கரையில் உழவுஇயந்திரம் பயன்படுத்திய கரைவலைத்தொழிலையும், 
நாயாற்றில் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதையும் ;
அந்தந்த பிரதேசத்தில் வாழிடஉரிமையுடன் வாழும் மீனவத்தொழிலாளர்கள் எதிர்ப்பதற்கான காரணம் : கடற்பாடுகளின் புவியியல் தோற்றப்பாட்டினை புரிந்துகொள்ளாமல் கடல்வளத்தின் அறுவடைக்கு பொருத்தமில்லாத மீன்குஞ்சுகள், இனப்பெருக்க வாழிடங்கள், பாசிகள், முருகைக்கற்பாறைகள் உள்ளிட்ட யாவற்றையும் வாரிக்கொண்டோடும் பேராசையை எதிர்ப்பதே!


வழிப்போக்கு மீன்பிடியும், அத்துமீறல் மீன்பிடியும் தென்னிலங்கை மீனவர்களின் மட்டுமல்லாது, தென்னிந்திய மீனவர்களினால் நிகழ்த்தப்படும்போதும், வடக்குகிழக்கு மீனவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் இதற்காகவே! 

சொந்தக்கடலை உரிமை கொண்டாடுவதன் காரணம், சம்பாத்தியமல்ல; கடல்வளத்தின் பேண்தகுநிலைமீதுள்ள அக்கறை.


அக்கறையுள்ள கடல்வள அறுவடையை பின்பற்றுவதில் வடக்கு கிழக்கு மீனவர்கள் தனித்துவமான முன்னுதாரணத்தை கொண்டவர்கள். தென்னிந்திய மீனவர்கள் போல கடலுயிரின இனப்பெருக்க காலத்துக்கான 45 நாள் மீன்பிடித்தடையை வடக்கு கிழக்கு கடலில் கடைப்பிடிக்க தேவையில்லாமல் இருப்பதும் கூட, அக்கறையான மீன்பிடியை கைக்கொள்வதனாலேயே!

தங்களை வாழ்விக்கும் ஆழியுலகின் மீது அக்கிரமம் கட்டவிழ்த்து விடப்படுவதை பொறுக்கமுடியாமல் அவர்கள் கோபப்படுகிறார்கள், ஆக்கிரமிப்பை எதிர்த்து கேள்விகேட்கின்றார்கள்.

இந்த கோபத்தையும் - அத்துமீறல் மீதான அறத்தையும் இலங்கை சட்டங்கள், குற்றங்கள் என்று வரையறுக்கின்றன.

தனது வாழிடத்துக்குரிய கடலில் தொழிலுக்கும் - வளப்பாதுகாப்புக்குமான உரிமையை கோரிய தமிழ்குடிகளின் வாழ்வாதாரத்துக்குரிய பலஇலட்சம் பெறுமதியான தொழிலுபகரணங்களும், வாடிகளும், வலைகளும்; சட்டப்பாதுகாப்புடன் - இராணுவமேலாதிக்கத்துடன் எரித்தழிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவிலிருந்து எழுந்திருக்கும் மீனவகுடிகளின் கோபக்குரல் வெறுமனே ஒரு தொழிற்சமூகத்தின் அங்கலாய்ப்பல்ல? 

வடக்கிலங்கையில் தொடர்ச்சியாக அத்துமீறலுக்கு உள்ளாகிற சிறுபான்மை தமிழர்கள் மீதான அடக்குமுறையின் பிறிதொரு வடிவம்.


திணைக்களங்களாலும் - அதிகாரிகளாலும் - அரசியல்வாதிகளாலும் நீதிகிட்டுமென்று எதிர்பாராமல் - பாகுபாட்டு சாயம் பூசாமல், 

தமிழின அடக்குமுறைக்கு எதிரான முல்லைத்தீவின் குரலை பலப்படுத்தி ஒத்துழைக்க வேண்டியது, ஒட்டுமொத்த இனக்கடமை.

No comments