Header Ads

test

அத்துமீறிய மீன்பிடி:உறுதி மொழிகள் தொடர்பில் காத்திருப்பு!

இலங்கை அரசின் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் உறுதி மொழி வழங்கியது போன்று தென்னிலங்கை மீனவர்களிற்கு வழங்கப்பட்ட தொழில் அனுமதி இம்மாதத்தினுள் இரத்து செய்யப்படவேண்டும்.தவறினால் மீண்டும் முற்றுகைப்போராட்டத்தில் குதிப்பதை தவிர வேறு வழியில்லையென முல்லைத்தீவு மீனவர் அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

கடந்த 10 நாள்களாக முன்னெடுத்துவந்த தொடர்போராட்டம், மீன்பிடித்துறை அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவின் உறுதிமொழியை அடுத்து, நேற்று (12) கைவிடப்பட்டது.  

சட்டவிரோதமான கடற்றொழில்களை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தற்;போது வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் யாவும் தற்காலிகமாகத் தடை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.  


இந்த விவகாரம் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு, அக்குழுவே, ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளது. அதுவரையிலும் அந்த அனுமதிகள் யாவும் தடை செய்யப்பட்டுள்ளன என அரச அமைச்சர் உறுதிமொழி வழங்கினார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (12) காலை மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தலைமையில் குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இதன்போது, விசேட பாதுகாப்பு நலன் கருதி, மாவட்ட செயலகத்துக்கு முன்னால் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கலந்துரையாடல் இடம்பெற்று வந்து சந்தர்ப்பத்தில், சுமார் ஆயிரம் மீனவர்கள் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் முல்லைதீவு சாலை முதல் முகத்துவாரம் வரையிலான கடற்கரை பகுதிகளினை ஆக்கிரமித்து பாதுகாப்பு தரப்பின் ஆசீர்வாதத்துடன் தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை சிங்களவர்கள் தொடர்பில் அரச அமைச்சர் வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றுவது தொடர்பில் மீனவ அமைப்புக்கள் கவனம் கொண்டுள்ளன.

No comments