ஹோட்டல் நிகழ்வில் பங்கேற்ற மூவர் திடீர் மரணம்
வாத்துவ கடற்கரை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
நேற்று (04) இரவு குறித்த ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களில் நால்வருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கெஸ்பேவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான நபர் ஒருவரும் திவுலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏனைய இருவரில் வாத்துவை, மொரந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபர் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மற்றைய நபர், பாணந்துறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
களியாட்ட நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடாத்தும் தனியார் நிறுவனம் ஒன்றினாலேயே குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு, அந்நிகழ்விற்கு குறித்த ஹோட்டலின் மண்டபம் ஒன்றை அந்நிறுவனம் பதிவு செய்திருந்தது.
குறித்த நிகழ்விற்கு பெண்கள் உள்ளிட்ட சுமார் 1,500 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிகழ்வின் பாதுகாப்பு கடமைக்கு மற்றுமொரு தனியார் நிறுவனமொன்றை இந்நிறுவனம் அமர்த்தியுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பில், குறித்த நிறுவனம் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதோடு, இதற்காக சமூக வலைத்தளங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் வாத்துவை பொலிசார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பாணந்துறை நீதவான் நீதிமன்றிற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து, பாணந்துறை பதில் நீதவான் குறித்த இடத்திற்கு சமூகமளித்து நீதிமன்ற விசாரணைகளை மேற்கொண்டார்.
குறித்த மரணங்களுக்கான காரணம் தொடர்பில் அறிந்து கொள்ள, பாணந்துறை நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, சடலங்கள் தற்போது பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிசார், இது வரை 20 இற்கும் மேற்பட்ட சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
Post a Comment