ஈபிடிபியைச் சேர்ந்த இரட்டைக் கொலையாளி நெப்போலியன் இந்தியாவில் - துவாரகேஸ்வரன் தகவல்
இரட்டை கொலை குற்றவாளியான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என அழைக்கப்படும் எஸ். ரமேஸ் தற்போது இந்தியாவில் உள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி. துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்ட இரட்டை கொலை குற்றவாளியான நெப்போலியன் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளார்.
அவர் ஐரோப்பிய நாட்டில் வசிப்பதாக வெளியான தகவல்கள் பொய். அவர் தற்போது இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு , சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் என துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும், வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும் ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
அது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நீதிமன்றம் கண்ட மூன்று எதிரிகளுக்கும். இரட்டை கொலை குற்றத்திற்காக இரட்டை மரண தண்டனை வழங்கியும் , 18 பேரை கடும் காயங்களுக்கு உள்ளக்கிய குற்ற சாட்டுக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனையும் ஒரு இலட்ச ரூபாய் தண்ட பணமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளான
நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் , மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா , ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.
Post a Comment