யார் தடுத்தாலும் மரணதண்டனையை அமுல்ப்படுத்துவோம் - ராஜித
ஜீ.எஸ்.பி சலுகை இழக்கும் நிலை ஏற்பட்டாலும் கூட போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புள்ளவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார். அரசாங்கம் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் வேறு சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாம் முழுமையாக மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யவில்லை. போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்தவாறு மீண்டும் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வரும் 19 பேர் தொடர்பில் மாத்திரமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
மரண தண்டனை அமுல்படுத்தினால் ஜீ.எஸ்.பி சலுகையை ரத்து செய்ய நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப்பதிலளித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை யை நிறைவேற்ற அமைச்சரவை ஏகமனதாக முடிவு செய்தது.ஜி.எஸ்.பி சலுகையையோ வேறு எந்த விடயத்தையோ இழக்க நேரிட்டாலும் முன்பு அறிவித்தவாறே மரண தண்டனையை அமுல்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார்.
தவறு செய்த சிறை செல்பவர்கள் அங்கு தம்மை திருத்திக் கொள்ள முயலவேண்டும்.சிறை என்பது புனர்வாழ்வு பெறும் இடம். ஆனால் போதைப் பொருள் வர்த்தகம்தொடர்பில் தண்டனை அனுபவிக்கும் நிலையில் மீண்டும் அதே தவறை செய்தால் வெளியில் எத்தனை பேர் இறப்பார்கள். எனவே இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மாற்றம் கிடையாது- என்றார்.
Post a Comment