சம்பந்தன் - கோத்தா பிளவு தீர்ந்தது?
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள கோத்தபாயவிற்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரிற்குமிடையே நிலவிவரும் மனத்தாங்கலை தீர்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மும்முரம் காட்டத்தொடங்கியுள்ளார்.2012ம் ஆண்டளவில் லண்டன் சென்றிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரிற்கும் விடுதலைப்புலிகள் சார்பு தரப்புக்களிற்குமிடையே நடந்த இரகசிய சந்திப்பு தொடர்பாக புலனாய்வு கட்டமைப்புக்கள் கோத்தபாயவிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தன.இதனை தொடர்ந்து தொலைபேசி மூலம் இரா.சம்பந்தனை தொடர்புகொண்ட கோத்தபாய விடுதலைப்புலிகளை மீள கொண்டுவர பாடுபடுவதாக இரா.சம்பந்தனை எச்சரித்து மிரட்டியதாக சொல்லப்படுகின்றது.
ஒருவகையில் அது இரா.சம்பந்தனது வயோதிபத்தை கூட கருத்தில் கொள்ளாத கொலை அச்சுறுத்தலாக அமைந்திருந்ததாக தெரியவருகின்றது.இதனால் மனஅழுத்தத்திற்கு உள்ளான சம்பந்தர் மருத்துவ சிகிச்சைக்குள்ளானதுடன் அமெரிக்க.இந்திய உயர்மட்டங்களது கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரியவருகின்றது.அத்துடன் கோத்தபாயவை திருப்திப்படுத்த நாடாளுமன்றத்தில் புலிப்பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன் தனக்கும் புலிகளது அச்சுறுத்தல் இருப்பதாக பேசிய பேச்செல்லாம் அமைந்திருந்தது.
இதன் பின்னரே ரணிலையும் மைத்திரியையும் ஆட்சிபீடமேற்றும் கைங்கரியத்திற்கு முன்வந்ததாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையிலேயே தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கைவிடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
சீன இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள சங்ரிலா விடுதியில், நேற்று மாலை வரவேற்பு விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில், மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன், கோத்தாபய ராஜபக்ச, சீனத் தூதுவர் செங்சியுவான், அருகருகே அமர்ந்திருந்து நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.
குறிப்பாக, மகிந்த ராஜபக்சவும், இரா.சம்பந்தனும், கோத்தாபய ராஜபக்ச அருகில் இருக்கும் போது, தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினர்.
சம்பந்தனையும் கோத்தாபய ராஜபக்சவையும் அருகருகே அமர்த்திப் பேசி, இணக்கப்பாடான சூழலுக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்தினேன் என்று சந்திப்பு தொடர்பில் மஹிந்த தெரிவித்துள்ளார்.
Post a Comment