பொன்னாலை : கடற்படை வெளியேறியது?


பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சமீபமாக, ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் இன்று (19) மாலை 6.30 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

22 வருடங்களாக அந்த அன்னதான மடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த அவர்கள் இன்று அங்கிருந்து வெளியேறினர். அன்னதான மடத்திற்கு சொந்தமானவர்கள் தொடர்ந்து விடுத்துவந்த வேண்டுகோளினைத் தொடர்ந்தே கடற்படையினர் வெளியேறினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கடந்த 1996 ஆம் ஆண்டு அரச படைகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றியபோது, பொன்னாலையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஒருசில மாதங்களின் பின்னர் பொன்னாலை முற்றுமுழுதாக கடற்படையினரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

அன்று தொடக்கம் பொன்னாலை தொடக்கம் கீரிமலை வரையான கரையோரப் பிரதேசம் பொதுமக்களின் நடமாட்டம் அற்ற சூனியப் பிரதேசம் ஆக்கப்பட்டு கடற்படையினர் மட்டுமே ஆதிக்கம் செய்தனர்.

பொன்னாலையில் மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தியபோதிலும் அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை. பொன்னாலை பெரும் கடற்படை முகாமாக மாற்றப்பட்டிருந்தது.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயச் சூழலில் இருந்த கட்டிடங்கள், மூன்று அன்னதான மடங்கள், தனியாரின் வீடுகள் போன்ற அனைத்திலும் கடற்படையினர் தங்கியிருந்தனர். சில கட்டிடங்களில் பெண் கடற்படையினரும் தங்கியிருந்தனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் 2012 டிசம்பர் மாதமே பொன்னாலையில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது ஏனைய கட்டிடங்களில் இருந்த கடற்படையினர் வெளியேறிய போதிலும், இரு அன்னதான மடங்களில் மட்டும் கடற்படை தங்கியிருந்தது. சில ஆண்டுகளில் பின்னர் மற்றைய அன்னதான மடத்தில் இருந்தும் வெளியேறினர்.

இன்று, மூன்றாவது அன்னதான மடத்தையும் விட்டு அவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர். கடற்படையின் பெரும் முகாமாக இருந்த பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயச் சுற்றாடல் இன்றுடன் படையினரின் எந்தக் காவலரணும் இல்லாத இடமாக மாறியிருக்கின்றது.

தற்போது, பொன்னாலைச் சந்தியிலும் பொன்னாலை குடிதண்ணீர் விநியோகத் திட்ட வளாகத்திலும் இரு இடங்களில் கடற்படையினர் நிரந்தரக் காவலரண்களை அமைத்துத் தங்கியிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment