ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையும் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்


ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கின்றதென்றால் அதிகாரப்பகிர்வுக்கு என்ன நடந்தது என்ன கேள்வி எழும். நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமித்து ஒற்றையாட்சியை நடத்த முடியுமென்றாகின்றது எனத் தெரிவித்திருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறான ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையுந் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ எனக்குத்தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


வடக்கு மாகாண சபையின் 126வது அமர்வு இன்று (10) கைதடியிலுள்ள பேரவை மண்டபத்தில் நடைபெற்றது. அமர்வில் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டுமன்றத் தீர்ப்புக்கு குறித்து விளக்கமளித்தார்.
இவரது உரை வருமாறு,

“ஒழுங்குப் பிரச்சனை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அது நாம் எதிர்பார்த்ததுதான். அண்மைய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானம் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதன் நிமித்தம் இந்த சபைக்கு சுருக்கமான  ஒரு விளக்கத்தை அளிக்கவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.
உச்ச நீதிமன்றத்தின்முன் மேன்முறையீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தில் மேன்முறையிட்டு நீதிமன்றம் எந்த ஒரு மாகாண முதலமைச்சர் தானும் தமது அமைச்சர் குழாமின் அமைச்சர் ஒருவரை  நியமிக்கவோ, பதவி இறக்கவோ முடியாது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனக் கூறி கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவி இறக்கத்தை ஆளுநர் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் பிரசுரிக்காத காரணத்தினாலோ என்னவோ கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்கின்றார் என்று தீர்மானித்துள்ளார்கள்;.
ஆனால் இத் தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளது. திரு.டெனீஸ்வரன் அவர்களைச் சேர்த்தால் அமைச்சர் குழாம் ஆறாக மாறும். இது சட்டத்திற்குப் புறம்பானது. ஐந்துக்குக் கூட அமைச்சர்கள் இருந்தால் அது அரசியல் யாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமையும். ஆறுபேருடன் அமைச்சர் குழாம் செயற்பட்டால் அது அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரண்பட்டதாக ஆகிவிடும். சட்டவலுவற்றதாக அமையும். அதனால் அமைச்சர் குழாமின் செயற்பாடுகள் சட்டபூர்வமற்றதாய் அமைவன. அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடந்து கொள்ள நாங்கள் தயாரில்லை.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எம்மால் இயைந்து அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை மீற முடியாது. ஆகவே தான் நாங்கள் இதுபற்றிய உச்ச நீதிமன்ற தீர்மானத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இவ் வழக்கில் மிகவும் முக்கியமான சட்டப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கக் கூடியவர்கள் உச்ச நீதிமன்ற நீதியரசர்களே. உண்மையில் அவர்களுக்கு மட்டுமே இந்த அதிகாரம் அரசியல் யாப்பின் 125ம் இலக்க ஏற்பாட்டால் வழங்கப்பட்டுள்ளது.
எமது நிலைப்பாடு மாகாண அமைச்சர் குழாமில் உள்ள அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் பதவி இறக்குவதைத் தீர்மானிப்பது அந்தந்த மாகாணங்களின் முதலமைச்சர்களையே சார்ந்ததாகும் என்பதே.
அரசியல் யாப்பின் 154 கு(5)ன் ஏற்பாடுகள் பின்வருமாறு அமைந்துள்ளது–
“மாகாணமொன்றின் சார்பாக அமைக்கப்பெறும் மாகாணசபையொன்றின் மற்றைய அமைச்சர்கள், சபை உறுப்பினர்களின் மத்தியில் இருந்து முதலமைச்சரின் சிபார்சின் பெயரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்.”
இந்த உறுப்புரை அமைச்சர்களை எவ்வாறு பதவி நீக்கம் செய்யலாம் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.
மேற்படி உறுப்புரையின் ஏற்பாடுகளைக் கவனித்தீர்களானால் ஆளுநர் தானாக அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாது என்பது கண்கூடாகப் புரியும். முதலமைச்சரின் சிபார்சின் பெயராலேயே அவர் எவரையாவது அமைச்சராக நியமிக்க முடியும். இது சம்பந்தமாகத் தானாக அவர் இயங்க முடியாது.
தற்போதுள்ள நிலையில் ஐந்துக்கு மேற்பட்ட அமைச்சர்கள் பதவி வகித்தால் அது சட்டத்திற்குப் புறம்பாகும். எமது நடவடிக்கைகள் சட்ட வலுவற்றதாக மாறிவிடுவன. ஆகவே தான் நாங்கள் உச்ச நீதிமன்ற தீரமானத்தை எதிர்பார்த்துள்ளோம்.
இதில் பல சிக்கல்கள் உள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி முதலமைச்சர் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ பதவி இறக்கவோ முடியாது. ஆகவே தற்போது எந்த ஒரு அமைச்சரையும் பதவி இறக்க என்னால் முடியாது. முன்னர் எனது சிபார்சுக்கு அமைய தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு கௌரவ ஆளுநருக்கிருந்தது. முதலமைச்சர் என்ற கடமையில் இருந்து நான் தவறவில்லை. என் வரையறைக்குள் இருந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். வர்த்தமானிப் பிரசுரங்கள் போன்றவை எனது வரையறைக்கு அப்பாற்பட்டன.

ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கின்றதென்றால் அதிகாரப்பகிர்வுக்கு என்ன நடந்தது என்ன கேள்வி எழும். நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமித்து ஒற்றையாட்சியை நடத்த முடியுமென்றாகின்றது. இவ்வாறான ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையுந் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ எனக்குத்தெரியாது.

தெற்கில் உள்ள மாகாண சபைகளையும் இவ்வாறான தீர்மானங்கள் பாதிக்கின்றன. ஆகவே அதிகாரப் பரவலாக்கம் பதின்மூன்றாந் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்ற அரசியல் யாப்பு சம்பந்தமான விடயத்தையும் உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
ஒரு சில நாட்களுள் உச்ச நீதிமன்றம் எமது மேன்முறையீட்டின் காரணமாகப் பூர்வாங்கத் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருக்கும். இவை எனது சொந்தக் கருத்துக்களே. வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நடவடிக்கையில் இருப்பதால் நீதிமன்றத் தீர்மானங்களைப் பற்றி இச் சபையில் விவாதம் நடத்துவது முறையாகாது என்பதைச் சொல்லி வைக்கின்றேன். - என்றார்.

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment