மூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் கைது
இலங்கையில் இருந்து 2,75,24,000 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் தொகையை சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த சீன மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த நால்வர் இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்கள் இருவரும் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், நேபாள நாட்டவர்கள் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இன்று அதிகாலை 5.40 மணியளவில் ஜெட் எயார்வேய்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 9W-255 என்ற விமானத்தில் இந்தியாவின் முப்பாய் நோக்கி செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த நபர்கள் கொண்டு வந்த பயணப்பை மற்றும் அணிந்து வந்த ஆடைகளில் 169,900 அமெரிக்க டொலர்களை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நால்வரும் இலங்கையில் கெசினோ விளையாட வந்தவர்கள் எனவும், அவர்கள் விளையாடி வெற்றி பெற்ற பணத்தையே இவ்வாறு எடுத்து செல்ல முற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சுங்க அதிகாரிகளால் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment