சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா
சிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா நாளை முன்னிட்டு, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“சமரசம் மற்றும் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி என்பன, எல்லா இலங்கையர்களுக்குமான நலன்களை பலப்படுத்தும் என்று கனடா நம்புகிறது.
காணாமல் போனோருக்கான பணியகத்தை செயற்பட வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் ஊடாக, அமைதியான, நல்லிணக்கமான, சமரசமான, செழிப்பான சிறிலங்காவை உருவாக்குவதாக, தமது சொந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, முழுமையாக நிறைவேற்றுமாறு சிறிலங்காவை தொடர்ச்சியாக கோரி வருகிறோம்.
அனைத்துலக சமூகம், பூகோள அமைப்புகளுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்துவதில் சிறிலங்கா முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தனது வணிக உறவுகளை விரிவாக்கி முதலீட்டு வளங்களை பலப்படுத்தியிருக்கிறது.
இந்தப் பாதையில் பயணிக்க சிறிலங்காவையும், அதன் மக்களையும் , கனடா தொடர்ந்தும், வலுவாக ஊக்குவிக்கும். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நாமும் அதற்கு உதவுவோம்” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment