30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக!
எமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்டும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு இருக்கின்ற நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் கல்வி வலய பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்களின் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் கல்வி அமைச்சின் நடமாடும் சேவை யாழ் வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
நாங்கள் கடந்த 30 ஆண்டுகால போரில் எமது சொத்துக்களை இழந்திருக்கிறோம்,உயிர்களை இழந்திருக்கிறோம். எங்களுடைய மக்களி தொகையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களை நாங்கள் எமது மாகாணத்தில் இழந்திருக்கின்றோம். இந்த 15 லட்சம் மக்களின் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகளை நாங்கள் இழந்திருக்கிறோம். ஆகவே இதனால் எங்களுடைய பாடசாலைகளில் இதன் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. இதனால் எங்களுடைய பாடசாலைகளில் மாணவர் தொகை குறைவாக இருக்கிறது. ஆகவே குறைந்தளவு மாணவர்கள் எங்களுடைய பாடசாலைகளில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் வல்லுனர்களாக்கவேண்டும். அவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டியது ஆசிரியரகள். எனவே ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். அந்த வகையில் ஆசிரியர்கள் அனைவரிகதும் நிர்வாக ரீதியான சுமைகளைக் குறைப்பதே எமது நோக்கம்.
நாங்கள் 30 ஆண்டுகாலம் போர் புரிந்தோம் என்றால் அது எமது இனத்திற்காகத்தான்,நாங்கள் இப்பொழுதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்றால், போராடிக்கொண்டிருக்கின்றோம் என்றால் அதுவும் எமது இனத்திற்காகத்தான். ஆனால் இன்று எங்களுடைய சனத்தொகை குறைந்திருக்கிறது. எங்களுடைய சமுதாயம் இந்த நாட்டில் நின்மதியாகவும் துணிச்சலுடனும் வாழ வேண்டுமாக இருந்தால் நல்ல மாணவர் சமூகத்தை உருவாக்க வேண்டும் அத்தகைய மாணவர்களை உருவாக்குகின்ற பெரும்பணி ஆசிரியர்களான உங்களையே சேரும் எனவே நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள். உங்களது அர்ப்பணிபான சேவையை பெறுவதற்காக நாங்கள் உங்களுக்கு இருக்கின்ற நிர்வாக ரீதியான பிரச்சினைகளை களைந்து நீங்கள் அனைவரும் நின்மதியாக பணிபுரிவதற்கு வேண்டிய வேலைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.
இன்றைய நடமாடும் சேவையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்,கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார்,கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அனந்தராஜ்,யாழ் வலய கல்விப்பணிப்பாளர் சுந்தரசிவம் உள்ளிட்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாகாண கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்கள், வலயக்கல்விப்பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 190 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் இன்றைய நடமாடும் சேவைக்கு கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் 170 இற்கும் அதிகமான முறைப்பாடுகளுக்கு உடனடித்தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment