ஹற்றன் நஸனல் வங்கியின் பதிலுக்கு காத்திருப்பு!
வங்கி தனது முகநூல் பக்கத்திலும் ஏனைய ஊடகங்களுக்கும் இறந்த எமது உறவுகளை நினைவு கூர்வதை இலங்கையில் அமைதிக்கும் நல்லெண்ணத்துக்கும் பங்கம் ஏற்படுத்துவதாக சித்தரித்து இருந்ததை இதுவரை மீளப் பெறவுமில்லை அல்லது தமிழர்களிடம் மன்னிப்பு கோரவும் இல்லை. எனவே மே 18 எமது உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் எமது அடிப்படை உரிமையை வங்கியும் ஏனைய தென்பகுதி நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ளும் வரை எமது எதிர்ப்புணர்வை தொடர்ந்து வெளிப்படுத்துவோமேயென முன்னணி சமூக வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுத்தமைக்காக ஹட்டன் நஸனல் வங்கி தனது பணியார்களை இடைநிறுத்தியமை தமிழர்களின் அடிப்படை உரிமை மீறலும் தமிழர் கலாச்சாரத்தின் மீதான அவமதிப்புமேயெனஅவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுத்தமைக்காக ஹட்டன் நஸனல் வங்கி தனது பணியார்களை இடைநிறுத்தியமை தமிழர்களின் அடிப்படை உரிமை மீறலும் தமிழர் கலாச்சாரத்தின் மீதான அவமதிப்புமேயெனஅவர் தெரிவித்துள்ளார்.
வங்கி நிர்வாகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் உங்களுடைய வங்கி உயிரிழந்த உறவினர்களுக்கும் அன்பானவர்களுக்கும் நினைவு அஞ்சலி செலுத்தியதற்காக கிளிநொச்சி கிளையை சேர்ந்த இரு ஊழியர்களை தண்டித்து இருப்பதை அறிந்து மனவேதனை அடைகிறோம். வருடம் தோறும் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவது பல நூற்றாண்டு காலமாக தமிழர்களினதும் சிங்களவர்களினதும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக இருந்து வந்துள்ளது. உண்மையில் மிகவும் தொன்மையான தமிழர்களின் அறமுறையை விவரிக்கும் 3000 வருடங்களுக்கு முற்பட்ட நூலாகிய திருக்குறள் 42 மற்றும் 43வது குறள் வரிகளில் மனிதர்கள் இறந்தவர்களுக்கு , பிதிர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. இத்தகைய சூழ்நிலையில் இறந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய உங்களுடைய ஊழியர்கள் மீது தீர ஆலோசிக்காது எடுக்கப்பட்ட உங்களுடைய நடவடிக்கையானது தமிழர் கலாச்சாரத்துக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் அவர்களது அடிப்படை உரிமையை கடுமையாக மீறும் செயல் ஆகும்.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 14 (1) (க ) பிரிவு "ஒவ்வொரு பிரஜையும் தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் இணைந்தோ தனது சொந்தக் கலாச்சாரத்தை அனுபவிக்கவும் மேம்படுத்தவும் உள்ள சுதந்திரத்துக்கு உரித்துடையவர்கள் " என்று கூறுகிறது. முக்கியமாக இந்த சுதந்திரத்தின் மீது அரசியலமைப்பின் வேறு எந்த ஒரு பிரிவுகளாலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. மருத்துவ ரீதியாக நோக்கும் போது இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவது பிரிவுத் துயரில் ஆழ்ந்து இருப்பவர் மீண்டும் பழைய நிலைக்கு தேறி வருவதற்கும் அவருடைய மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிகவும் முக்கியமானது. இலங்கையைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த விதமான நிவாரணமும் வழங்கப்படாததன் காரணமாகவும் தமிழினப் பேரழிவுக்கு காரணமானவர்கள் இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படாத நிலையில் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து உள்ளது.
கிளிநொச்சியானது 2009 ஆம் ஆண்டு இந்தப் பிராந்தியத்தில் வசித்தவர்கள் பெரும் சேதத்தையும் இறப்புகளையும் சந்தித்த ஒரு இடமாக உள்ளது. எனவே இந்தப் பகுதியில் தமிழருடன் வியாபார தொடர்புகளை விரிவாக்க விரும்பும் உங்கள் வங்கி இங்கே வசிக்கும் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ள முயற்சி செய்து இருக்கவேண்டும் என்பதுடன் அதுவாகவே மே 18 ஆம் திகதியில் இறந்தவர்களின் வருடாந்த நினைவாஞ்சலியை செலுத்தும் கலாசார நிகழ்வை ஒழுங்கு செய்து இருக்கவேண்டும். இத்தகைய நல்லெண்ண செயலுக்கு பதிலாக உங்களுடைய வங்கி பொறுப்பற்ற தென்பகுதி இனவாத ஊடகங்களுடன் இணைந்து கொண்டு அமைதியான நினைவஞ்சலி நிகழ்ச்சியை புலிகளுக்கு பரிவு காட்டும் நிகழ்ச்சியாக சித்தரிக்கும் கீழ்நிலைக்கு சென்றது. உங்களுடைய வங்கியின் இந்த அடக்குமுறைச் செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பல்லாண்டு காலமாக தமிழர்கள் வெளிப்படையான காரணங்களுக்காக ஏனைய அரச வங்கிகளை விட ஹட்டன் நாஷனல் வங்கியை மிகுதியாக விரும்பி செயற்பட்டு இருப்பதை முழுமையாக அறிந்து இருப்பீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். தற்போது கிளிநொச்சி ஊழியர்களுக்கு எதிரான உங்கள் நடவடிக்கை ஊடகங்களில் வெளிவந்ததை தொடர்ந்து பல தமிழர்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகளை மூடுவதோடு தமிழர் மத்தியில் விரைவாக உங்களுடைய வங்கி செல்வாக்கை இழந்து வருகிறது.
எனவே எதிர்காலத்தில் உங்களுடைய வங்கி தமிழர் மத்தியில் வியாபாரத்தை வெற்றிகரமாக தொடர விரும்பினால் பின்வரும் யோசனைகளை நான் முன்மொழிகிறேன் .
1. இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊழியர்களை தாமதமின்றி மீண்டும் வேலைக்கு அமர்த்துவதோடு வேலையை இடைநிறுத்தியதால் அவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கும் மனஉளைச்சலுக்கும் உரிய நட்டஈட்டை வழங்க வேண்டும் .
2. நினைவஞ்சலி நிகழ்ச்சியை நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் பங்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக முகநூல் மற்றும் ஏனைய ஊடகங்களில் சித்தரித்து வெளியிடப்பட்ட அறிக்கைகள் மீளப் பெறப்படவேண்டும்.
3. அனைத்து தமிழர்களையும் அவமதிப்புக்கு உள்ளாக்கிய உங்களுடைய நடவடிக்கைக்கு வெளிப்படையான மன்னிப்பு கோரலும் எதிர் வரும் வருடங்களில் இறந்த தமிழ் பொதுமக்களுக்கு வருடாந்த நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் பங்கு பற்றும் உங்களுடைய ஊழியர்களுக்கு எந்த வித தடையும் ஏற்படுத்தப்படாது என்ற உறுதிமொழியும் வழங்கப் படவேண்டும்.
என்னுடைய யோசனைகளுக்கு இணங்க முடிந்தால் 2 வாரங்களுக்குள் நீங்கள் பதில் தந்தால் உங்களுடைய பதிலை நான் ஊடகங்களில் வெளியிடுவதோடு உங்களுடைய வங்கிக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை குறைப்பதற்கு என்னாலான முயற்சிகளை செய்வேன். ஆனால் நீங்கள் எனக்கு பதில் அளிக்க தவறினால் இந்தப் பிரச்சினை பெரிதாகி வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய கிளைகள் , உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகங்களுக்கு பரவுவதோடு தமிழர்களின் தன்மானத்தையும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் உறுதியான பிரச்சார இயக்கமாக மாறும் என நான் அஞ்சுகிறேனென முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
Post a Comment