மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்!
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று 15வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாட்ட நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் பெற்று மல்லாகம் நீதி மன்றத்திற்குச் சென்றுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு புதிய நீதிபதியாக நீதிபதி ரி.ஜெ.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14ம் திகதி இடை நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள் இன்று காலை 7.30 மணியளவில் 15வது தடவையாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது களனி பல்கலைக்கழக 'தொல்பொருள்' அகழ்வு தொடர்பான கற்கை நெறி மாணவர்களும் இணைந்துகொண்டனர்.
அத்துடன், பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா குழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டனர்.
இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ச்சியாக அகழ்வு பணிகளின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இன்று மாலை 4.45 மணியளவில் மன்னார் மாவட்ட நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் குறித்த பகுதிக்குச் சென்று அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட்டதுடன், விசேட சட்ட வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
Post a Comment