உடுப்பிட்டி:தொடரும் கொள்ளைகள்:காவல்துறையும் கூட்டு?
வடமராட்சியின் உடுப்பிட்டிப்பகுதியில் கடந்த ஆறு மாத காலத்தினுள் ஜந்தாவது தடவையாக வீடொன்றினில் சுமார் 47 இலட்சம் வரையிலான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.மருத்துவ சத்திரசிகிச்சையொன்றிற்காக இந்தியாவிற்கென எடுத்துச்செல்ல தயாராக இருந்த பணமே நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.
வீட்டினுள் புகுந்த கொள்ளையர் இருவர் வயோதிப பெண்களை தாக்கிய பின்னர் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
உடுப்பிட்டி புளியடி மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே தொடர்ச்சியாக கொள்ளைகள் நடைபெற்றுவருகின்றது.வல்வெட்டித்துறை காவல்நிலைய எல்லையினுள் அடுத்தடுத்து நடந்துவரும் கொள்ளையினை தடுக்க முடியாது காவல்துறை வேடிக்கை பார்ப்பதாக மக்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளனர்.காவல்நிலைய பொறுப்பதிகாரி அடிக்கடி சொந்த ஊரான அனுராதபுரம் சென்றுவிடுவதாகவும் இதனால் காவல்துறை செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பாக வீட்டில் ஆட்களில்லாத வேளைகளிலும் அதே போன்று தனித்து வயோதிப குடும்பங்களை இலக்கு வைத்து கொள்ளைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்ற போதும் இதுவரை குற்றவாளிகளை கண்டறியவோ கொள்ளையிடப்பவற்றினை மீட்கவோ வல்வெட்டித்துறை காவல்துறை தவறிவிட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக வயோதிப குடும்பங்களது வீடுகளிற்கு இரவு வேளைகளில் கொள்ளையிட சென்ற கொள்ளையர்கள் அவர்களை தாக்கியிருந்ததுடன் தங்கியிருந்து உணவருந்தியும் சென்றிருந்த சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
இதனிடையே அருகாகவுள்ள வர்த்தக நிலையத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
மோப்பநாய் மற்றும் தடவியல் குழுக்கள் வழமை போல ஆய்வுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment