மைத்திரி எதையும் செய்யவில்லை - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் குற்றச்சாட்டு
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீர்திருத்த அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும், நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும், வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், பொறுப்புக்கூறல், மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் என்று பலர் கருதிய போதிலும், அவர் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸ் ஸ்மித் இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும், சமூகங்கள் மத்தியில் பிணைப்பை அதிகரிக்க சிறிலங்கா ஜனாதிபதி எதனையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“சிறிலங்காவின் மனித உரிமைகள் கரிசனைகள்” என்ற தலைப்பில் நடந்த அமெரிக்க காங்கிரசின் உப குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழுவின், ஆபிரிக்க, பூகோள சுகாதார, பூகோள மனித உரிமைகள், மற்றும் அனைத்துலக அமைப்புகளுக்கான உபகுழு, நேற்று “சிறிலங்காவின் மனித உரிமைகள் கரிசனைகள்” என்ற தலைப்பில் அமர்வு ஒன்றை நடத்தியது.
இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கிய, உபகுழுவின் தலைவரான, கிறிஸ் ஸ்மித், தனது உரையில்,
“இரு சமூகங்கள் மத்தியிலான, அரசியல் துருவமயப்படுத்தல் அதிகரித்துள்ளது. சிறிலங்காவில் உள்நாட்டுப் போர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், முடிவுக்கு வந்தது, 25 ஆண்டு கால போரினால், ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர்.
பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான கொடூரமான இன மோதல்களாக இந்த உள்நாட்டுப் போர் இடம்பெற்றது.
போரில் ஈடுபட்ட இருதரப்புகளான சிறிலங்கா ஆயுதப் படைகளும், தமிழ்ப் புலிகளும் கற்பனை செய்து பார்க்க முடியாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் நீதி என்பது கண்ணிற்கு தென்படாத விடயமாகவே உள்ளது” - என்றார்.
Post a Comment