பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்துவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரிந்துரைத்துள்ளதாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். கட்சியின் தலைவர் என்ற வகையில் இந்த நியமனத்துக்கு, மைத்திரிபால சிறிசேனவின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், அங்கஜன் இராமநாதனை பிரதி சபாநாயகராக நியமிப்பதற்கு இந்தக் கூட்டத்தில் எதிர்ப்பு வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவரை கூட்டமைப்பு ஆதரிக்காது என்று கூறினார் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கஜன் இராமநாதன், பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டால், 48 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் பதவியைப் பெற்ற தமிழர் என்ற பெருமையைப் பெறுவார். இதற்கு முன்னர், 1968ஆம் ஆண்டு தொடக்கம், 1970ஆம் ஆண்டு வரை ஏ.சிதம்பரம் பிரதி சபாநாயகராகப் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment