Header Ads

test

ஆளுநர் காலில் வீழ்ந்தது தமிழர் ஆசிரியர் சங்கம்!


வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்கு நிரந்தர கல்விப்பணிப்பாளரை உடனடியாக நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (03) தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வடமாகாணத்தில் உயர்நிலை அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாகவும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் இதுவரை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பதவி வெற்றிடமாக உள்ளது. இதனை உயர்நிலை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உணருவதாக இல்லை.

வடக்கு மாகாணம், கல்வியில் கடைசி இடத்தில் இருப்பது குறித்து இவர்கள் யாரும் கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தமக்குச் சாதகமான நிலைமைகளை சுயநலமாகச் சிந்தித்து செயற்படுவதாகவே நாம் உணருகின்றோம். இவர்கள் எல்லோருக்கும் தகுந்த பாடத்தைக் கற்கும் தருணம் உருவாகி வருவதனை உணருவதாகவும் இல்லை.

வடக்கில் உள்ள மாணவர்களின் நலன் கருதியும், வடபுலத்து கல்வி நிலையை கருதியும் இனிமேலாவது  சுயநலச் சிந்தனைகளை விடுத்து பொதுநலச் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அனைவரையும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.


ஓரிரு நாட்களில் கல்வி அமைச்சின் செயலாளர் நியமனம் நடைபெறும் என நாம் எண்ணுகின்றோம். அவ்வாறே யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் நியமனமும் இடம்பெற வேண்டும். இதுவே நாம் ஆளுநரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை. இதனை ஆளுநர் உடனடியாக நடைமுறைப்படுத்தவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. ஏனெனில் வடக்கு மாகாணத்தின் அத்தனை நியமனங்களும் ஆளுநரின் அங்கீகாரத்துடனேயே நடைபெற வேண்டும் என்பது அரசநியதி” என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments