Header Ads

test

கூட்டமைப்பின் இழப்பீடா முள்ளிவாய்க்கால் தூபி - ஆனந்த சங்கரி கேள்வி

பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பற்றத் தவறியமைக்கு இழப்பீடாகவா, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்படவுள்ளதென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில், நேற்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில், “தமிழ் மக்கள், எவரையும் இலகுவாக நம்புவார்கள் என்ற பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு, எல்லாக்காலத்திலும் அவர்களை முட்டாள்களாக்க சிலர் நினைப்பது, வேதனைக்குரிய விடயம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகளால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதெனக் கூறிக்கொண்டு, தாம் செய்யும் அத்தனை விடயங்களுக்கும், விடுதலைப் புலிகளைச் சாட்சிக்கு அழைப்பது வேடிக்கையாக இருக்கின்றதென்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

மன்னார், வவுனியா, கிளிநொச்சி உட்பட முள்ளிவாய்க்கால் வரைக்கும், தமது சொத்துகளைப் பெருமளவில் இழந்து, ஏறக்குறைய வெறுங்கையுடன், பல கஷ்டங்களுக்கு மத்தியில், முள்ளிவாய்க்காலில் நம்மக்கள் வாழ்ந்தார்கள் எனச் சுட்டிக்காட்டிய ஆனந்தசங்கரி, இக்காலகட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மௌனம் சாதித்ததைத் தவிர, வேறு எதையும் செய்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். 

“இவ்வாறானதொரு நிலையில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கென நினைவுத் தூபி அமைக்க, கூட்டமைப்பினர் முனைவது, உலகில் வாழும் அத்தனை தமிழ் மக்களையும் மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. 

“ஆகவே, எவரும் இவ்விடயத்தில் அரசியல் இலாபம் தேட முயலாமல், சம்பவம் நடைபெற்ற இடத்தில் அமைதியான முறையில் நினைவு நாளை அனுஷ்டிக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன். தூபி அமைப்பது தொடர்பில் அரசியல் சார்பற்ற ஒரு பொது அமைப்பொன்று பொறுப்பேற்பதே பொருத்தமாகும்” என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

No comments