ஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்!!!


இரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின் சிரிப்புக்கள் செத்துப் போகும். ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் வியர்வையுடன் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால நம்பிக்கைகள் எல்லாமே கசிந்து காற்றிலே கரைந்து போகும். காட்டுவழி எங்கும் போக்கிடம் இன்றி போய்க்கொண்டிருந்த மனிதர்களிடம் மரணபயம் ஒன்றே மிச்சமிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலத்தின் மனச்சாட்சியை அந்த மனிதர்களின் மரண ஓலங்கள் பிடித்து உலுப்பிக் கொண்டுதான் இருக்கும். இதயமுள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீரும் சென்னீரும் கரைந்து கொண்டு தான் இருக்கும். இந்த பேரழிவு, தமிழ்ச்சமுதாயத்து பல தலைமுறைகளின் வாழ்வையும் வளத்தையும் மண்ணோடு மண்ணாக புதைத்த பெரும் அவலம் ஏன் நிகழ்ந்தது. ஈழ இயக்கங்களின் குறிப்பாக புலிகளின் பிழையான அரசியலா? துரோகிகள் ஊடுருவியதாலா? இலங்கை அரசாங்கங்களின் சமாதான பேச்சுவார்த்தைகளை சரியான முறையில் பயன்படுத்தாமல் விட்டதாலா? இந்தியாவை பகைத்ததா? அமெரிக்கா, மேற்கு நாடுகள், ஜக்கிய நாடுகள் சபை எனப்படும் சர்வதேசத்தின் கருணையை பெற்றுக் கொள்ளாததாலா? ஈழவிடுதலை இயக்கங்களின் அரசியல் எப்போதும் மாணவர்கள், இளைஞர்களின் அரசியலாகவே இருந்தது. அதனால் அது தவிர்க்க முடியாதபடி ஊசலாடும் தன்மை கொண்டதாகவும், தமிழ் குறுந்தேசியவாதத்தில் இருந்து தமிழ் பாசிசமாக மாறி மற்றத் தேசிய இனங்களை விரோதிகளாக்கி இறுதியில் தன் சொந்த தமிழ் மக்களையே சிறை பிடித்து பலி கொடுத்தது. ஈழவிடுதலைப் போராட்டம் என்றைக்குமே மக்கள் போராட்டமாக இருந்ததில்லை. யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றிய போது புலிகள் மக்களை தென்மராட்சிக்கு பலாத்காரமாக வெளியேற்றி பின்பு வன்னிக்கு போகச் சொன்ன போது பெரும்பாலான மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்திற்கு திரும்பி போனதும், இறுதியில் வன்னிப்போரின் போது குழந்தைகளை கட்டாயமாக புலிகள் அமைப்பில் சேர்த்ததும், பொதுமக்களை தப்பியோடாமல் ஆயுதமுனையில் நிற்க வைத்து பலி கொடுத்ததும் ஈழவிடுதலைப் போராட்டம் என்றைக்குமே மக்கள் போராட்டமாக இருந்ததில்லை என்பதை இரத்த சாட்சியங்களாக எடுத்துச் சொல்கின்றன. எதிரிகள், துரோகிகள் இல்லாத போராட்டம் எங்கு உண்டு. போராட்டங்களின் போதும், போராட்டங்களின் வெற்றிக்குப் பின்பும் எதிரிகள், துரோகிகள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். போராட்டங்களில் தோழர்களாக இருந்தவர்கள் பின்பு துரோகிகளாக மாறியிருக்கிறார்கள். சிலர் இறுதிவரை தம்மை காட்டிக்கொள்ளாமல் சந்தர்ப்பங்களிற்கு காத்திருப்பார்கள். புரட்சிகர கட்சியினாலும், அர்ப்பணிப்பும் தோழமையும் சமத்துவமும் மனதில் கொண்ட தோழர்களினாலுமே துரோகிகளை முறியடிக்க முடியும். மேதகுகள், பெரியய்யாக்கள், தானைத்தலைவர்கள் என்று அதிகாரமையங்களை உருவாக்கும் அமைப்புக்கள் எதிர்வினையாக துரோகிகளையும் இலகுவாக உருவாக்கியே தீரும். வலதுசாரி இலங்கை அரசுகள் எப்போதுமே மக்களிற்கு எதிரானவை. எழுபதுகளில் முப்பதினாயிரம் சிங்கள மக்களை கொன்ற சிறீமாவின் சுதந்திரக்கட்சி அரசாகட்டும், தொண்ணூறுகளில் அறுபதினாயிரம் பேரை கொன்ற பிரேமதாசாவின் ஜக்கிய தேசியக்கட்சி அரசாகட்டும், வன்னியில் நாற்பதினாயிரம் தமிழ் மக்களைக் கொன்ற மகிந்தாவின் அரசாகட்டும், அவை என்றைக்கும் மக்களிற்கு எதிரான அரசுகள். அவை எந்த பிரச்சனைகளையும் கொலைகளாலும், அடக்குமுறைகளாலும், அச்சுறுத்தல்களாலும் அழிப்பதையே தமது வழிமுறையாக கொண்டவர்கள். தமது சூழலை நாசமாக்கும் குப்பைமேடுகளிற்கு எதிராக போராடும் அப்பாவிப் பெண்களையே கைது செய்பவர்கள், தீர்வு தருவார்கள் என்பதை விட அயோக்கியத்தனம் எதுவுமில்லை. தனது சொந்தநாட்டு மக்களின் வாழ்விற்கும், வாழ்வின் ஆதாரமான இயற்கைக்கும் அழிவு செய்து வரும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிற்கு எதிராக போராடும் ஏழை எளிய மக்களை கொன்று குவிக்கும் இந்திய அரசு, இலங்கைத் தமிழ் மக்களை காப்பாற்றும் என்பது கடைந்தெடுத்த பொய். ராஜிவ்காந்தி அனுப்பிய ஆக்கிரமிப்பு ராணுவத்தினால் கொல்லப்பட்டவர்களின் மரண ஓலங்களும், விதவைகளாக்கப்பட்ட பெண்களின் கதறல்களும் இன்னும் காற்றிலே கரைந்து போய்விடவில்லை. குவாண்டனாமா, வளைகுடாவிலும், அபுகாரிப் சிறைச்சாலையிலும் சித்திரவதை செய்பவர்கள் இலங்கை அரசின் மனிதகுலத்திற்கு எதிரான படுகொலைகளை எதிர்ப்பார்கள், நியாயம் வழங்குவார்கள் என்பது இன்னொரு குரூரமான பொய். நவதாரளவாத பொருளாதாரத்திற்காக உலகம் முழுக்க கொலைகள், கொள்ளைகள் செய்பவர்கள் தமிழ் இனத்தின் கண்ணீரை துடைப்பார்கள் என்பது மக்கள் தமது சொந்தக்காலில் எழுவதை மீண்டும் மீண்டும் தடுக்கும் பிற்போக்குதரகர்களின் மோசடிகள். சிங்கள மக்கள் இருமுறை தோற்கடிக்கப்பட்டனர். தமிழ் மக்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. இன்று முஸ்லீம் மக்கள் மேல் தாக்குதல்கள் தொடருகின்றன. மலையக மக்கள், இலங்கையின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தமது உழைப்பை பிழிந்து கொடுப்பவர்கள் பசித்த வயிறுடன் கால் நீட்டமுடியா தகரகுடிசைகளிலே தவிக்கிறார்கள். இந்த ஒடுக்கப்படும் எல்லா மக்களும் இணைந்து போராடுவதன் மூலமே பலம் பொருந்திய இலங்கை அரசை வீழ்த்த முடியும். தனித்தனியே போராடும் போது இனவாதம், மதவாதத்தை பாவித்து இலங்கை அரசு பொதுமக்களையே ஒருவருக்கு எதிராக ஒருவரை போராடவைக்கும். கடந்தகால வரலாறுகள் அதையே காட்டி நிற்கின்றன. இது மிகவும் கடினமான போராட்டம். மக்களின் மனதில் ஆழமாக இறுகிப் போயிருக்கும் இனவாதத்தை உடைத்தெறிய வேண்டிய போராட்டம். பிற்போக்குவாதிகளையும், பிராந்திய வல்லரசுகளையும், பிணந்தின்னும் சர்வதேச கழுகுகளையும், இலங்கையின் பாசிச அரசையும் எதிர்த்து எழவேண்டிய போராட்டம். கடக்க வேண்டியது பெருந்தூரம். ஆயினும் அடி கருகிய புற்கற்றைகளிலிருந்து இரண்டொரு பசும்முளைகள் வெந்து தணிந்த சாம்பல்களில் இருந்து எழத்தான் செய்யும்.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment