Header Ads

test

குத்துச்சண்டை வேண்டும்:இளைஞர்களிடம் முதலமைச்சர்!


மொகமட் அலியின் குத்துச்சண்டை போன்று எமது நகர்வுகள் இருக்கவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் விசேட அமர்வு யாழ்.பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றிருந்தது.அங்கு சிறப்புரையாற்றிய அவர் எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள்,பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள்,சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம்.சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின்மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது.

இன்றைய இளைஞர் குழாம் பல விதங்களில் முன்னைய காலத்தில் வாழ்ந்த எம்மவர்களில் இருந்து வித்தியாசமானவர்கள். நாம் வயதுக்கும் முதுமைக்கும் மதிப்புக்கொடுத்தோம். இன்று அப்படியில்லை. இன்றைய பிள்ளைகள் உலக விடயங்கள் பலதையும் பத்துப் பதினைந்து வயதுக்கு முன்னரே அறிந்து கொள்கின்றார்கள். உலக ஞானம் அவர்களுக்கு நிரம்பவும் உண்டு. கைபேசிகள், கணணிகள், தொலைக்காட்சிகள் போன்றவை சதா அவ்வாறான ஞானத்தைக் கொடுத்துக்கொண்டே உள்ளன.அதே போல் சுயநலமும் அவர்களுக்கு அதிகம். உலக ஞானத்தில் திளைத்தவர்கள் பொதுவாகவே சுயநலமிகளாக இருப்பார்கள் என்பது ஞானிகளின் கருத்து.


தமிழ் மக்கள் பேரவை யாவரையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். எமது தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வழி நடத்துவது எமது கடமையாகும். இதுவரை காலமும் எமது அரசியல் கொள்கைகளை முன் வைத்து கூட்டங்கள் வைத்து மக்களுக்கு அரசியல் அறிவைப் புகட்டி வந்துள்ளோம். தொடர்ந்தும் அதனைச் செய்யவே இருக்கின்றோம். ஆனால் எமது காலத்தின் பின்னர் எமது அரசியல் சமூக அமைப்புக்களைக் கொண்டு நடத்தப் போவது இளைஞர் யுவதிகளே. திடீர் என்று தலைமைத்துவம் அவர்கள் வசம் செல்வதிலும் பார்க்க இப்பொழுதிருந்தே அவர்கள் தமது காரியங்களை, கடப்பாடுகளை, கடமைகளை உணர்ந்து நடக்கத் தொடங்கினால் அதுநன்மை தரும் என்று நம்புகின்றோம். 

இதன் காரணத்தினால்த்தான் தமிழ் மக்கள் பேரவை இளைஞர் மகாநாடு ஒன்றினை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தது. இவ்வாறான மகாநாடுகளில் நாங்கள் சில விடயங்களை வலியுறுத்த உள்ளோம். அரசியல் ரீதியாக நாங்கள் அவர்களுக்கு சில அடிப்படை விடயங்களை எடுத்துக் கூற வேண்டியுள்ளது.

சமூக ரீதியாகவும் சில விடயங்களை அவர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம். 

முதலில் அரசியலை எடுத்துக் கொள்வோம். எமக்கென சில உரித்துக்கள் உண்டென்று சர்வதேசச் சட்ட நூல்கள் கூறுகின்றன. இந்த நாட்டின் ஆதிக் குடியினரின் வழிவந்தவர்கள்என்பதால் தமிழர்களாகிய எமக்கு நாம் வாழும் இடங்களில் சுயாட்சி கோர சட்டப்படி உரித்து இருக்கின்றது. மேலும் எமக்கு எம்முடைய கலை, மொழி, கலாச்சாரம் போன்றவற்றை சுதந்திரமாகப் பாவித்து பாதுகாத்து வர உரித்துண்டு. நாம் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் மேல் எமக்கு உரித்துண்டு. நிலங்களின் வளங்களை எடுத்துப் பாவிக்க உரித்துண்டு. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள் என்ற முறையில் எமக்கு சில உரிமைகள் உரித்துக்கள் உண்டு என்பதை இதுகாறும் மறந்துவிட்டோம்.பாரம்பரிய மூத்த குடிகள் பற்றிய உரித்துக்களை உள்ளடக்கியுள்ள ஐக்கிய நாடுகள் விளம்பல் ஆவணத்தில் அவை இடம் பெற்றுள்ளன. 46 ஷரத்துக்களைக் கொண்ட அதில் பல உரித்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசீலனை செய்தல் நன்மை பயக்கும்.
இன்று எம்மிடையே ஒரு வித பலவீனம் உருவாகியுள்ளது. இது இளைஞர் யுவதிகளிடமும் காணப்படுகின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் நாம் தோற்றுவிட்டோம் என்ற ஒரு மனோ நிலை எங்கள் மனதில் குடிகொள்ளத் தொடங்கியுள்ளது. எமது எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்த இனி யார் வரப் போகின்றார் என்ற ஒரு நம்பிக்கை அற்ற நிலை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இதனை மாற்றி எம் இளைஞர் யுவதிகள் மனதில் வலுவேற்றுவது எமது பொறுப்பு. 

உலக அதி கூடிய எடைக்குரியகுத்துச் சண்டை வெற்றி வீரனாக ஒரு காலத்தில் வலம் வந்த மொகமட் அலி குத்துச் சண்டை அரங்கினுள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்திருக்கின்றீர்களோ எனக்குத் தெரியாது. வலையத்தளங்களில் இப்போதும் பார்க்கலாம். அரங்கினுள் நடனமாடுவது போல் அங்கும் இங்குமாக வலம் வருவார். அவர் தன்முகத்துக்கு எதிரியின் எந்த ஒரு குத்தும் படாமல் பார்த்துக் கொள்வார். எதிரியின் குத்துக்கள் பலமாக இருந்தால் தன் கைகளுக்குள் எதிரியின் தலையைப் பிடித்து தொடர்ந்து அவர் குத்த முடியாமல் ஆக்கிவிடுவார். மத்தியஸ்தர் அப்போது இருவரையும் பிரித்து விடுவார். இவ்வாறே நடனமாடி சுற்றுக்களை ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு எதிரியைப் பலம் இழக்கச் செய்வார். அதாவது பலம் கொண்ட மட்டில் எதிரி குத்த எத்தனித்து எத்தனித்து அவை வீண்போகவே தனது பலத்தை மெல்ல மெல்ல அவர் இழக்கத் தொடங்கிவிடுவார். முகமட் அலி நடனமாடிக் கொண்டு அவரிடம் இருந்து தப்பிப் போய் கொண்டிருப்பார். திடீரென்று ஒரு சுற்றில் அலியின் குத்துக்கள் எதிரியின் மீது சரமாரியாகப் பொழிய அவர் சுருண்டு நிலத்தில் விழுந்து விடுவார். அலி வெற்றிவாகை சூடுவார். 

இதனை எதற்காக இங்கு கூறினேன் என்று நினைப்பீர்கள். காரணம் இருக்கின்றது. எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள்,பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள்,சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம்.சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின்மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது. இந்த நேரத்தில் நாங்கள் மொகமட் அலியிடம் இருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.

அதாவது இத்தருணத்தில்த்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த,நேர்ந்துகொண்டிருக்கும் இடர்களைப் பற்றி எல்லாம் உலகறியச் செய்ய வேண்டும். சுயாட்சியை வழங்க அவர்களே முன்வர வேண்டும். ஒரு கட்டத்தில் தமது தேவையின் நிமித்தம் எமக்குரிய சுயாட்சி உரிமையை அவர்கள் கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை ஒளி மலரத் தொடங்கினால் இளைஞர்கள், யுவதிகள் ஏன் நாம் எல்லோருமே புதுத்தென்பு பெறத் தொடங்கி விடுவோம். ஆகவே இளைஞர் யுவதிகளின் மனதில் புதுத் தென்பைஉண்டாக்க எமது தமிழ் மக்கள் பேரவை பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டும்.எமது தன்னம்பிக்கையே எமது நிலையான சொத்து.

இன்று இளைஞர்கள் யுவதிகள் மட்டத்தில் நம்பிக்கையீனம் குடிகொண்டதால்த்தான் அவர்கள் சில தகாத வழிகளிலே செல்ல எத்தனிக்கின்றார்கள். பரீட்சைகளில் போதிய புள்ளிகள் இல்லாமை, மனதில் குறிக்கோள் இல்லாமை, குடும்பங்களுக்குள் ஏச்சுப் பேச்சுக்கள் என்று பல காரணங்களைக் கூறலாம். சிலருக்கு வெளிநாட்டுப் பணம் வந்து சேர்வதால்அதனைப் பாவிக்கத் தெரியாமல் திண்டாடும் நிலைமையும் அவர்களை ஆத்திரம் அடைய வைக்கின்றது. சிலர் வெளிநாட்டுப் பணத்தை உபயோகித்து மோட்டார் சைக்கிள்களை வாங்குகின்றார்கள். மது அருந்துகின்றார்கள். வாக்கு வாதங்களில் ஈடுபடுகின்றார்கள். வன் செயலிலும் ஈடுபடுகின்றார்கள். 

அவர்கள் மனதில் குறிக்கோள் இல்லாததே இதற்குக் காரணம். ஒன்றில் உயர் கல்வி ரீதியாக நான் இந்தவாறாக வருவேன் என்ற ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அல்லது விளையாட்டு ரீதியாக அவ்வாறான குறிக்கோள்கள் இருக்கலாம் அல்லது வணிக ரீதியாகக் குறிக்கோளகள்; இருக்கலாம். இல்லை என்றால் ஏதாவது ஒரு சமயம் சார்பான குறிக்கோள்கள் கூட இருக்கலாம். குறிக்கோள்கள் அவசியம் என்பது எம் எல்லோருக்குந் தெரியும். ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கனவு காணச் சொன்னார். எமது குறிக்கோள்கள் செயற்படுத்தப்படுவன என்று கனாக் காண வேண்டும். 

அரசியல் ரீதியாக ஒரு குறிக்கோளையும் அதனை அடையும் வழிமுறைகளையும் நாம் இளைஞர் யுவதிகளுக்குச் சொல்லிக் கொடுத்தோமானால் அவர்களை நாம் எமது சமூகத்தின் மிக வலுவான ஒரு அலகாக மாற்றியமைக்க முடியும். ஆகவே தான் இளைஞர் கருத்தரங்கங்களை தமிழ் மக்கள் பேரவை ஒழுங்கு படுத்த முன் வந்தமையின் காரணத்தை இப்பொழுது நீங்கள் ஓரளவு உணர்ந்திருப்பீர்கள். 

இவ்வாறான ஒரு எண்ணம் என்னுள் பரிணமித்தது எப்பொழுது என்று கேட்டீர்களானால் எனது விடை நகைச்சுவையாக இருக்கும். 

என்னைப் பதவியில் இருந்து விரட்ட எம் மாகாண சபை உறுப்பினர்கள் பல சதிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் “நாம் உங்களுடன்” என்று இளைஞர்கள் ஒன்று கூடித் தமது ஆதரவை வெளிப்படுத்திய போது நான் ஒன்றைக் கூறினேன். அதுநன்றிப் பெருக்கில் என்னை அறியாது வெளிவந்த சொற்கள். “நானும் உங்களுடன் இருப்பேன்” என்று கூறினேன். பதவி பறி போகின்றதோ இல்லையோ “நான் உங்களுடன்” என்ற போது தான் என்னால் இளைய சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்ற கேள்வி உதித்தது. 
இளைஞர்களின் பலத்தை நன்மைக்கும் பாவிக்கலாம். தீயனவற்றிற்கும் பாவிக்கலாம். தமிழ் மக்கள் பேரவை அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து குறிக்கோள்களைக் கொடுத்து மதிப்பையும் கொடுக்க முன் வந்தால் அவர்கள் சமூகத்தின் ஆர்வலர்களாக மாறிவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்.

மேலும் அரசியல் கட்சிகள் இரண்டாம் மட்ட அல்லது மூன்றாம் மட்ட இளைஞர்களை யுவதிகளை தலையெடுக்க விடாது அவர்களைத் தட்டித் தட்டி வைப்பதையும் நான் கண்டுள்ளேன்.தலைவர்கள் தகைமை அற்றவர்களாக இருக்கும் போது தம்மிடத்தை மற்றவர்கள் பிடித்துக் கொள்வார்களோ என்று அவர்கள் சந்தேகிப்பது நாம் கண்டு வரும் ஒரு நிகழ்வு. தகைமையுடையவர்களை மேலெழும்ப விட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ் மக்கள் பேரவை செய்ய வேண்டும். இளைஞர் யுவதிகளை அடையாளம் கண்டு எம்முடன் இணைத்துக் கொள்ள முன் வர வேண்டும். முதலில் இளைஞர் அணிக்குள்ளும் காலம் செல்லச் செல்ல மத்திய குழுவிற்குள்ளும் அவர்களை ஈர்க்க வழி அமைக்க வேண்டும்.

அரசியல் குறிக்கோள்கள் கொள்கை ரீதியாக இருக்கலாம், சமூக ரீதியாகவும் இருக்கலாம். சமய ரீதியாகவும் இருக்கலாம். மற்றவர்களுக்கு உதவுவதில்த்தான் எமக்கு உண்மையான மகிழ்ச்சி ஏற்படும் என்று நாம் சமய ரீதியாக உணர்ந்து கொண்டோமானால் சமூக ரீதியாக உதவிகளைச் செய்ய எமது இளைஞர் யுவதிகள் முன்வருவார்கள். கூட்டாக இணைந்து செயற்கரியவற்றை செய்யக் கூடியவர்கள் இளைஞர் யுவதிகள். சிரமதானம் செய்வது, இரத்ததானம் செய்வது, பணம் சேர்த்து தானங்கள் பல இயற்றுவது போன்ற பலவற்றை இளைஞர் யுவதிகள் செய்யலாம். தாம் வாழும் கிராமங்களை சுத்தமுடன் சுகாதாரமுடன் இருக்க ஆவன செய்யலாம். சமூகச் சீர் திருத்தத்திலும் அவர்கள் ஈடுபடலாம். பொலிசாருக்கு ஒத்தாசையாக பொது மக்கள் குழுக்களில் கடமையாற்றிப் போதைப் பொருள் பாவனை, மணல் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் பணிகளில் இளைஞர்கள் ஈடுபடலாம். வன் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளங்கண்டு அவர்களின் வாழ்க்கைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்தலாம்.

இவற்றிற்கெல்லாம் சரியான வழிநடத்தல் முறைகளை நாம் புரிந்து கொண்டுதான் அவர்களை ஆற்றுப்படுத்த முன்வர வேண்டும். 

என்னுடைய மனதில் உதித்த சில கருத்துக்களை நான் கூறிவிட்டேன். தமிழ் மக்கள் பேரவை எமது இளைய சமுதாயத்தை எவ்வாறு வழி நடத்துவது என்ற விடயத்தில் சிந்தித்துப் பற்றுறுதியுடன் செயற்பட வேண்டும். நாம் வெறும் கடமைக்கு வேலை செய்பவர்களாக இருந்தால் எம்மீது இளைஞர் சமுதாயத்திற்கு சந்தேகமும், ஆத்திரமும், கோபமும் வந்து விடும். எம்முள் அன்பும் கரிசனையும் மேலெழுந்ததால்த்தான் அவர்கள் எம் வழிக்கு வருவார்கள்.

எனவே இளைஞர் யுவதிகளை வழிநடத்த தமிழ் மக்கள் பேரவை முன்வர வேண்டும்; இளைஞர்களுக்கான குறிக்கோள்களை அவர்கள் மனதில் உள்ளடக்க நாம் பாடுபட வேண்டும். கூடுமான வரையில் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவும் நாங்கள் முன்வர வேண்டும்.உன்னத குறிக்கோள்களை இளைஞர் அணிகள் மத்தியில் விதைத்தால் பயிர்கள் செழித்து வளருவன. சமூகம் மறுமலர்ச்சி அடையும். ஆகவே இளைஞர் யுவதிகளை அரசியல் ரீதியாக ஆற்றுப்படுத்த நாம் எம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோமென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments