Header Ads

test

காற்றாலை வருமானம் வேண்டுமென்கிறார் பளை தவிசாளர்!

முன்னாள் அமைச்சர் ஜங்கரநேசனிற்கு வருவாய் தந்த கிளாலி காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் தம் பக்கமும் பார்வையினை திருப்ப கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட பளை பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜூலி பவர்,வீற்ற பவர் போன்ற காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் வடமாகாண சபையின் விவசாய அமைச்சுக்கு வருடாந்தம் இரண்டு கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாக வழங்கிவருகின்றன.

இந்நிதி வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுச்சூழல் மேம்பாடு சார்ந்த தேவைகளிற்கு தற்போது செலவு செய்யப்பட்டுவருகின்றது.

ஆனால் தமது பிரதேசத்துக்கு இதன் மூலம் எதுவித பயனும் கிடைப்பதில்லை என பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசம் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு பல உட்கட்டுமானங்கள் சிதைவடைந்து காணப்படுகின்றது எனவும் இந் நிறுவனத்தால் கிடைக்கப்பெறும் நன்கொடையை குறைந்தது ஐந்து வருடங்கள் முழுமையாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு விடுவித்து தரும்பட்சத்தில் பிரதேசத்தின் தேவைகளை இயன்றவரை பூர்த்திசெய்யலாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளில் பாலாறும் தேனாறும் பாயச்செய்யப்போவதாக சொல்லி ஆட்சி பீடமேறிய கூட்டமைப்பினர் சபைகளது வருமானங்களை மேம்படுத்தும் எந்தவொரு திட்டமுமற்றவர்களாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஏற்கனவே வடமாகாணசபைக்கு நிதி வருவாய்களை தருபவற்றினை தமக்கு தருமாறு குடுமிப்பிடி சண்டைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

No comments