Header Ads

test

சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் – முக்கிய ஆவணங்களை அழித்தது பிரித்தானியா


சிறிலங்காவின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1970களின் இறுதிக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்புகள் சிறிலங்கா படையினருக்கு அளித்த உதவிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ நாளிதழ் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், சிறிலங்காவின் நடந்த கொடூரமான போரின் ஆரம்ப காலத்தில், பிரித்தானிய அரசு சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியமை தொடர்பான, எந்தப் பதிவுகளும் இல்லாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1978 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 200 கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனினும், இவை எப்போது- எங்கு- யாரால் அழிக்கப்பட்டன என்ற விபரங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிடவில்லை. பிரித்தானியாவின் பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருந்த போதும், இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனினும் இவை பாதுகாக்கத் தேவையற்றவை என்று பிரித்தானிய வெளிவிவகாரப் பணிகம் நியாயப்படுத்தியுள்ளது. 1978இற்கும் 1980இற்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பான 158 ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை வெளிவிவகாரப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், சிறிலங்காவின் பாதுகாப்பு நடைமுறைகளில் பிரித்தானியாவின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக , மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிறிலங்கா தொடர்பான நிபுணரும், குற்றவியல் நிபுணருமான Rachel Seoighe தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், உலகப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோவிடமும் முறைப்பாடு செய்துள்ளார். கென்யா போன்ற பல இடங்களில் நடந்த தவறுகளை மறைப்பதற்காக, அதிகாரபூர்வ ஆவணங்களை அதிகாரிகள் திட்டமிட்டு அழித்து விட்டனர் என்பது தெரியும். காணாமல் ஆக்கப்படுதல்கள் பாரிய கொடூரங்கள் நிகழ்த்தப்பட்ட சிறிலங்காவின் போரில், பிரித்தானியா எவ்வாறு உதவியது என்பது பற்றிய தகவல்களை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அழிக்கப்பட்ட ஆவணங்களின் தலைப்புகளை வெளிவிவகாரப் பணியகம் பாதுகாக்கின்றது. அதன்படி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆயுதங்கள் விற்பனை, வெளிநாட்டு உதவி, அரசியல் புகலிடக் கோரிக்கைகள் என்பன போன்ற முக்கியமான விடயங்களை உள்ளடக்கிய விரிவான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. அதேவேளை, பிரித்தானிய பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் உள்ள சில ஆவணங்களின் படி, சிறிலங்காவின் தமிழ் அமைப்புகளின் ஆயுதக் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்ஐ 5 மற்றும் எஸ்ஏஎஸ் அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக அனுப்பப்பட்டமை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் சிறிலங்கா கொமாண்டோக்களுக்கு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். எனினும், இவை தொடர்பான விரிவான விபரங்களை உள்ளடக்கிய பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ‘தி கார்டியன்’ சுட்டிக்காட்டியுள்ளது

No comments