தூத்துக்குடி படுகொலைக்கு முன்னணி கண்டனம்!

தமிழகம், தூத்துக்குடியில் தமிழக உறவுகள் மீது நடத்தப்பட்டுள்ள கொலை வெறி தாக்குதலை  தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டித்துள்ளது.


சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேந்தாந்தா ஸ்ரெர்லயிட் நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடுமாறுகோரி அமைதி வழியில் தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 

இப்போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று (22 மே 2018) பெருமளவிலான மக்கள் அப்பகுதியில் திரண்டிருந்த நிலையில், தமிழக அரசின் காவற்துறையினர் அவர்கள் மீது பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டிய பொது மக்களதும், பொது அமைப்புக்களதும் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காத நிலையில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி ஜனநாயக வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறு அமைதிவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வன்முறையில் ஈடுபடுவதுபோன்ற சூழலை திட்டமிட்டு உருவாக்கி கலவரத்தை அடக்குதல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 
சகட்டு மேனிக்கு நடந்த தாக்குதல்களாக இல்லாமல், கலவரத்தை அடக்குகிறோம் என்ற போர்வையில் இப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவற்துறையினர் குறிசூட்டுத்தாக்குதல் நடத்தியதன் மூலம் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.

வன்முறையில் ஈடுபடாமல், அமைதிவழியில் போராட்டத்தை நடாத்தியவர்கள் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய தமிழக காவற்துறையின் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இவ்விடயத்தில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டிக்கொள்கிறது.

கொல்லப்பட்ட தமிழக உறவுகளின் குடும்பத்தினருக்கு எமது இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழக மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் தோழமை உணர்வுடன் தனது தார்மீக ஆதரவை வழங்கும் என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றேனென கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment