Header Ads

test

பனங்காட்டான் எழுதிய ''குருதிவாய்க்காலாகிய முள்ளிவாய்க்கால் வலிமைக்குச் சூடேற்றும் மௌன ஆயுதம்''

உரிமைக்காகப் போராடிய தமிழினம் தனது இருப்புக்காக இறுதிவரை போராடிய களம் முள்ளிவாய்க்கால். இக்களத்தை குருதிவாய்க்காலாக்கிய சிங்களப் பேரினவாதம் போர்க்குற்றத்திலிருந்து தப்ப ஒன்பதாண்டுகளாகப் போராடி வருகிறது. இங்கு மௌனிக்கப்பட்டது ஆயுதங்கள் மட்டுமே என்பதை அனைவரும் அறிவர்.

முப்பதாண்டுகளாக புஜபல பராக்கிரம வலிமையுடன் போராடிய ஈழத்தமிழினம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வலி சுமந்துகொண்டிருக்கிறது. தான் பிறந்து வளர்ந்த தனது சொந்த மண்ணில் சகல உரிமைகளுடனும் வாழ்வதற்காக தமிழினம் நடத்திய போராட்டம் இது. 

இலங்கைத் தீவு பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று எழுபதாண்டுகளாகிவிட்டது. 

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கும் அதே வயதுதான். சிங்கள இனத்துக்குரிய அதே பிறப்புரிமைகள் வேண்டி தமிழினம் இப்போராட்டத்தை ஆரம்பித்தது. 

முதல் முப்பதாண்டுகள் சாத்வீகம். இதற்குக் கிடைத்தது அடியும், உதையும், சிறைவாசமும், படுகொலைகளும். 

அடுத்த முப்பதாண்டுகள் ஆயுதப் போராட்டம். அரச பயங்கரவாதத்தை ஆயுதங்களால் சந்திக்க நேரிட்ட போராட்டம் இது. தந்திரோபாய (கெரில்லா) தாக்குதல்களில் ஆரம்பமாகி, மரபுவழி யுத்தமாக மாறிய இப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனம் பெற்றது. 

அடுத்த ஒரு தசாப்தம் முடிவடைய இன்னமும் ஓராண்டேயுள்ளது. இதன் முதல் ஒன்பது வருடங்களும் ராஜதந்திர நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழ் தலைமைகள் ஏமாற்றப்பட்டுவிட்டனர். தமிழ் மண் கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடப்பட்டு கபளீகரம் செய்யப்படுகிறது. 

முப்பதாண்டு ஆயுதப் போராட்ட காலத்தில், எட்டியும் ஒட்டியும் நின்று தாக்துதல் நடத்திய சிங்களப் படை, இன்று தமிழர் தேசம் முழுவதும் கால் பரப்பி வியாபித்திருந்து வணிகம் நடத்துகிறது. 

தமிழ் மண்ணின் வளத்தை சிங்களத்தின் மூலதனமாக்க இராணுவம் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறது. 

சர்வதேச உதவியுடன் முள்ளிவாய்க்காலை குருதிவாய்க்காலாக்கிய சிங்கள அரசுக்கு அவர்கள் விரும்பும் அனைத்தையும் வழங்கும் கற்பகதருவாக தமிழர் தாயகம் ஆக்கப்பட்டுள்ளது. 

இங்கு படைகள் என்று குறிப்பிடப்படுவது தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய மூன்றையுமே என்பது கவனிக்கப்பட வேண்டியது. 

முள்ளிவாய்க்கால் மௌனிக்கப்பட்ட பின்னரே படையினர் சுமார் அறுபதாயிரம் ஏக்கர் (ஒரு ஏக்கர் 16 பரப்பைக் கொண்டது) நிலத்தை கையகப்படுத்தி அங்கு இப்போது நிலைகொண்டுள்ளனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் ஒரு செவ்வியில் தெரியப்படுத்தியிருந்தார். 

இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான லேக் ஹவுஸ் நிறுவனம் வெளியிடும் ஷசன்டே ஒப்சேவர்| பத்திரிகையில் இச்செவ்வி வெளியாகியது. 

தனியாருக்குச் சொந்தமான காணிகளை சிறிது சிறிதாக மீளக் கையளித்துவிட்டு அதனையும் இராணுவ ஆக்கிரமிப்புக் கணக்கினில் அரசாங்கம் காட்டி வருவது மோசமான ஏமாற்று. 

படையினர் தமிழர் தாயகத்தில் செய்யும் வணிகம் பலவகையானது.

காட்டுப்பாங்கான பிரதேசங்களில் மரங்கள் தன்னிச்சையாக தறிக்கப்பட்டு சிங்களப் பிரதேசத்துக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. 

தமிழ் பகுதியிலுள்ள கனிவளங்களில் முக்கியமான கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு அரசாங்க அனுமதியுடன் தெற்குக்கு அனுப்பப்படுகிறது. 

இப்போது ஏ-9 வீதி என அழைக்கப்படும் கண்டி வீதியின் இருமருங்கிலும் இயங்கும் கடைகள் இராணுவத்தினாலும், அவர்களின் குடும்ப உறவுகளாலும் நடத்தப்படுகின்றன. 

தேநீர், பணிஸ், பாண் மட்டுமன்றி சிங்கள மக்களின் பலகாரங்களும், கைவினைப் பொருட்களும் பல்லாயிரக்கணக்கில் இங்கு குவிக்கப்பட்டுள்ளன. 

சுற்றுலா மையங்கள், பயணிகள் தங்கிடங்கள், வரவேற்பு மண்டபங்கள், மதுபானச் சாலைகள் மட்டுமன்றி, விளையாட்டுத் திடல்களும் இராணுவ வணிகத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன. 

மகிந்த அரசாங்கக் காலத்தில் கட்டப்பட்ட தல்செவன என்ற விடுமுறைத் தங்கிடம் 2010க்குப்பின்னர் இராணுவத்தின் சொகுசு இடமாக நடத்தப்படுகிறது. 

பல்லாயிரம் ஏக்கர் தோட்டக்காணிகளில் இராணுவம் விவசாயம் செய்து அதன் உற்பத்திப் பொருட்களை அக்காணிகளின் சொந்தக்காரர்களுக்கே விற்பனை செய்து சிங்கள அரசின் கஜானாவை நிரப்புகிறது. 

முல்லைத்தீவை அண்டிய கடற்பிரதேசம் அப்பகுதி மீனவர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. சிங்களப் பகுதி மீனவர்கள் இக்கடல்வளத்தைக் கொள்ளையடித்துச் செல்ல கடற்படை அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. 

திருமுருகண்டியில் 1700 ஏக்கர் காணியை தன்வயப்படுத்தி முன்னைய ஆனையிறவுபோல சோதனை முகாம் அமைத்துள்ளது. 

மலிமா என்ற விருந்தோம்பல் சேவையை கடற்படையும், வான்வெளிச் சுற்றுலாச் சேவையை விமானப் படையும் வெற்றிகரமாக நடத்துகின்றன. 

விரிவாக இராணுவ வணிக முயற்சிகளை எழுதினால் அது நீண்ட பட்டியலாகும். 

வடமாகாண சபையிடம் ஓரளவுக்கு இவ்விபரங்கள் உள்ளனவென்பதை முதலமைச்சரின் அண்மைய செவ்வி தெரியப்படுத்துகிறது. 

இவ்விடயத்தில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்த கருத்து நகைப்புக்கிடமானது. 

இலங்கைப் படையினர் குடாநாட்டில் அமைதிப் படையினராக செயற்படுகின்றனர் என்பதே இவரது கருத்து. 

அமைதிப் படை என்றால் என்ன என்பதையும், அதன் செயற்பாடு எவ்வகையானது என்பதையும் ஈழத்தமிழர் முப்பதாண்டுகளுக்கு முன்னரே அனுபவத்தால் உணர்ந்தவர்கள். 

1987 ஜூலையில் தமிழர் தாயகத்தில் குவிக்கப்பட்ட இந்திய அமைதிப்படை அதன் மூன்றாண்டுக் காலத்தில் எவ்வகையான அராஜகங்களை மேற்கொண்டது என்பதை உலகமே அறியும். 

தமிழரை அவர்களின் சொந்த மண்ணிலேயே சிறைப்படுத்தி, கொடூரமாகக் கொலை செய்து, சோதனை என்ற பெயரில் பெண்களை பாலியல் வேட்டையாடி, தமிழர் சொத்துகளை இடித்தும், எரித்தும் நாசப்படுத்தி, தமிழர் இளைஞர்களை விசாரணை என்று கூறி இழுத்துச் சென்று காணாமற் செய்து.... இவ்வாறு அமைதிப்படை என்பதற்கு புது அர்த்தம் தமிழ் மண்ணில் கொடுக்கப்பட்டது. 

கடந்த 9 ஆண்டுகளாக தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருக்கும் இலங்கைப்படை அன்று இந்தியப்படை செய்தவைகளையும், அது செய்யாது போன எச்ச சொச்சங்களையும் இன்று நிறைவு செய்து கொண்டிருக்கிறது என்பதை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். உண்மை தானாகவே என்றோ ஒருநாள் வெளிவரும் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். 

வலி சுமக்கும் மக்களின் மனதில் போர்க்கால பயத்தை நிலைநிறுத்தி அதனூடாக அவர்களின் மனோவலிமையை இழக்கச் செய்யத்தான் இராணுவம் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது இப்போது நன்றாகப் புரிகிறது. 

முள்ளிவாய்க்காலில் இவ்வாண்டு நினைவேந்தலைக் குழப்பியடிப்பதில் அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் தோல்வி கண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போரின் முக்கிய அச்சாணியாகத் திகழ்ந்தது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். பொங்குதமிழின் உயிர்ப்பே இந்தப் பல்கலைக்கழகம்தான். 

தமிழீழ விடுதலைப் போரின் மறுமலர்ச்சியாக அன்று திகழ்ந்த இம்மாணவ சமூகம், இன்றும் அவ்வாறே நிலைகொண்டுள்ளது. 

இதனைப் பொறுக்க முடியாத சிங்களப் பேரினவாதம் வடமாகாண சபையையும் பல்கலைக்கழக மாணவ சமுதாயத்தையும் சிண்டு முடிந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குழப்பியடிக்க எடுத்த முயற்சி படுதோல்வி கண்டுவிட்டது. 

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வழிகாட்டலில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் அனு~;டிக்க மாணவர் சமூகம் முன்வந்திருப்பது இதனைச் சிதைக்க முற்பட்டவர்களின் கன்னத்தில் கொடுத்த அறை. 

இருதரப்பும் இணங்கி, அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மக்கள் பேரெழுச்சியாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வது உலகளாவிய ரீதியில் தமிழர் அனைவருக்கும் ஆழமான திருப்தியைக் கொடுத்திருக்கிறது. 

அதேபோன்று, புலம்பெயர்ந்த தமிழர்களும் கருத்து வேறுபாடுகளைத் துறந்து, ஒன்றிணைந்து, இனவழிப்பை வெளிப்படுத்தும் நினைவேந்தலை தத்தம் நாடுகளில் நடத்த வேண்டுமென்ற யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் வேண்டுகோள், காலக்கடமையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.


No comments