நேவி சம்பத் தப்பிக்க உதவினார் – அட்மிரல் குணரத்ன மீது நீதிமன்றில் குற்றச்சாட்டு
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான, சிறிலங்கா கடற்படை அதிகாரி நேவி சம்பத் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, கூட்டுப்படைகளின தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உடந்தையாக இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கை விசாரித்து வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியாகவும் உடந்தையாகவும் இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு பொறுப்பாக இருந்த அனைவருக்கு எதிராகவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, குற்றவாளியைத் தப்பிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைக்குட்படுத்தப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சில வாரங்களுக்கு முன்னர் இந்தக் குற்றச்சாட்டு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது சுமத்தப்பட்ட போது, குற்றச்சாட்டை நிரூபித்தால் உடனடியாக பதவி விலகுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment