Header Ads

test

அந்த அம்மாவினுடைய தாலி கொட்டகைத் தடியில் தொங்கிக் கொண்டிருந்தது!


2009 ஆண்டின் வலி சுமந்த நாட்களின் நினைவலைகளாய் இன்றும் என் உறக்கத்தை தொலைத்து நிற்கும் பதிவுகளாய் மீளும் காட்சிகள்… மாத்தளன் ,பொக்கணப்பகுதிகளில் இயங்கிய மருத்துவ மனைகள் தொடர்ந்தும் இயங்க முடியாதசூழ்நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு இடம் மாறி இயங்கத் தொடங்கியிருந்தது. மருத்துவமனைகள் அரச மருத்துவமனை என்பது பெயரளவில் தான்.அது இயங்கியது பாடசாலைகட்டடங்களில் தான். அங்கு மருத்துவர்களாக கடமையில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள்போராளி மருத்துவர்களே.
அன்றைய சூழ்நிலையில் காயமடைந்தவர்களினதும் அவர்கள் உறவினர்களுக்கும் மருத்துவர்கள் கடவுளாக தெரிந்தார்கள். மருத்துவ மனை சென்று வரும்ஒவ்வொரு நாட்களிலும் ,உறவுகள் தங்கள் காயமடைந்த உறவுகளை ஒருக்கா பாருங்கோ என அழைத்து கொண்டிருக்கும் சத்தம் இப்பொழுதும் என் செவிகளுக்கு கேட்டுக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு,குருதி தடுப்பு மருத்துவம் செய்யப்பட்டு, சத்திரசிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் பார்வை, எப்படியாயினும் தம் உறவுகளை காப்பாற்றவேண்டும் என்பதாகவே இருக்கும். இறந்த நிலையில் கொண்டுவரப்பட்ட உறவுகளின் சடலங்கள் மருத்துவ மனையின் ஒரு புறத்தில்,உறவுகள் அடையாளம் காண்பதற்கும் ,இறுதிகடமைகளுக்காகவும் துணிகளால் மூடப்பட்டிருக்கும். இறந்தவர்களில் அடையாளம் கண்டு ,உரிமை கோராத உடலங்கள் தமிழர்புனர்வாழ்வுப்பணியாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி கடமைகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. மருத்துவர்களும், தாதியர்களும், மருத்துவ போராளிகளும் ஓய்வு ,உறக்கம் இன்றி தம் மகத்தானபணியை செய்து கொண்டிருந்தனர். அன்றைய நாட்களில் பொக்கணையில் இருந்து வலைஞர்மடம் வந்து கொண்டிருந்தேன் . அவ்வேளை கடுமையான எறிகணைத் தாக்கு நடந்து கொண்டிருந்தது. எந்நேரம் எது நடக்கும் எனஅறியாத நெருக்கடியான சூழ்நிலை . வலைஞர்மடம் தேவாலயத்திற்கு அண்மையாக வரும் போது மிக குறைந்த தூரத்தில் ஓர் எறிகணை வீழ்ந்து வெடித்தது. அதனால் என் உந்துருளியைச் சரிந்து விட்டு நிலத்தில் அமர்ந்து கொண்டு நிலைமையை அவதானித்தேன். அருகில் கொட்டகைகளில் மக்கள் பதுங்கியிருந்து வெளியில் தலை காட்டத் தொடங்கினார்கள். அப்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என நினைத்து எழுந்தேன். அப்போ எங்கிருந்தோ எறிகணை ஒன்று அந்தகுடியிருப்புக்களின் நடுவே வீழ்ந்து வெடித்தது. நான் எப்படி கீழே வீழ்ந்தேன் என எனக்கு தெரியாது. உடனே எறிகணை வெடிப்பின் புகை நடுவே அவதானித்தேன். தறப்பால் கொட்டகை ஒன்று சிதறிக்காணப்பட்டது. எழுந்து அங்கே ஓடினேன் நான்கு பேர் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்தஅம்மாவினுடைய தலையைக் காணவில்லை . இருவருக்கு மட்டும் உயிர் இருந்தது.கையில் கிடைத்ததுணிகளினால் காயங்களை உடன் நின்றவர்களின் உதவியுடன் கட்டினேன்.யாரோ ஒருவர் ரக்டர் ஒன்றைக் கொண்டு வந்து நிற்பாட்டினார். உடனே காயப்பட்டவர்களையும்,இறந்தவர்களையும் துணிகளின் உதவியோடு ஏற்றினோம். வெளியில் வந்து பார்த்த போது அம்மாவின் தலையும் மணலோடு இரத்தமும் சேர்ந்து வேறுஉருவமாக காட்சி அளித்தது. நிமிர்ந்து பார்த்தேன் அந்த அம்மாவினுடைய தாலி அவர்களின் கொட்டகைத் தடியில் தொங்கிக் கொண்டிருந்தது.

No comments