Header Ads

test

“நான் கீழே விழுந்தவுடன் நெஞ்சில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டு இருந்தது


இத்தனை பேரின் உழைப்பும் மிககுறுகிய நேரத்தில் எனக்கு கிடைத்தபடியால் தான் நான் இன்று உயிரோடு இருக்கின்றேன். என் உயிரை காப்பாற்ற துடித்தவர்கள் அனைவரும் ஏற்கனவே போர்க்காலங்களில் வலிகளைச் சுமந்தவர்களே! ஒரு பத்திரிகையாளனான என் உயிரை மீட்டதற்காக என்ன நன்றிகடன் செய்யப்போறனோ தெரியவில்லை. .............. முந்தைய தொடர்ச்சி….. “நான் கீழே விழுந்தவுடன் நெஞ்சில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டு இருந்தது. கடற்கரை மணல் எடுத்து நெஞ்சில அடைத்தேன். அதன் பிறகுதான் அப்படியே மூக்காலயும் வாயாலயும் இரத்தம் வந்தபடியே மயங்கிவிட்டேன். …………… சிறிது நேரத்தில் “சுரேன் முடிஞ்சா ஓடிவா ஆமி உங்கால தான் அடிக்கிறான்” என்று மோகன் அண்ணையின் குரல் கேட்கிறது. அரைமயக்கம் ஒன்றுமே தெரியல்ல. குரல் வந்த திசையை நோக்கி ஓடினேன்.(மோகன் அண்ணை சொல்லித்தான் தெரியும்)…… …………
அரைமயக்கம், சத்தங்கள் கேட்கிறது. நான் சாகப்போறன் போல இருந்தது. “சுரேன் கொஸ்பிட்லுக்கு போவம்” என்று மோகன் அண்ணை சொல்லிக்கொண்டுஇருக்கிறார். நான் “கறுப்பு கொம்பூட்டர், கறுப்பு கொம்பூட்டர் என்று முனகினனாம். அந்தக்கறுப்புக்கொம்பூட்டரில் அப்படி என்ன தான் இருந்தது..... “அதில் தான் நிறைய புகைப்படங்கள். இதுவரையில் பத்திரிகையில் வெளிவராத பல புகைப்படங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் முக்கியமான தளபதிகள், அரசியல் பிரமுகர்கள், அரச தரப்பு பிரமுகர்களின் புகைப்படங்கள் உள்ளடங்கலாக சமாதான காலப்பகுதில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், விளையாட்டுக்கள், வீரச்சாவு நிகழ்வுகள், மற்றும் நாளாந்தம் செய்தியாளர்களினால் எடுக்கப்படும் புகைப்படங்கள் இறுதி காலத்தில் இடம்பெற்ற விமானத்தாக்குதல் மற்றும் எறிகணைத்தாக்குதல் சம்பவங்கள் என பல்லாயிரக்கணக்கான புகைப்படங்களை வைத்திருந்தேன். செந்தோழன் அண்ணையும், அன்புமணி அண்ணையும் தந்த புகைப்படங்கள் பலதையும் அதனுள்ளே தான் வைத்திருந்தேன். அவர்கள் இல்லாவிட்டாலும் எப்படியாவது கடைசிவரைக்கும் கொண்டுவந்தேன். கைநழுவிப்போச்சுது. என் உயிரை விட விலை உயர்ந்த அவ்ஆவணங்களை துலைச்சிட்டன் என்ற கவலை இன்று வரைக்கும் இருக்கிறது.” ........ மோகன் அண்ணை என்னை இழுத்துக்கொண்டு போயிருக்கிறார். குறிப்பிட்ட தூரம் சென்ற பின்னரே வாகனம் ஒன்றில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தேன். இவ்வளவும் 20 நிமிடத்தில் நடந்து முடிந்திருந்தாக மோகன் அண்ணை சொல்லியிருக்கிறார். நெஞ்சுப்பகுதியில் பெரிய காயம் என்பதால் உள்ளககுருதிப்பெருக்கினால் என்னால் சுவாசிக்கமுடியாமல் போய்விட்டது. “இன்னும் கொஞ்சநேரத்தில் நான் சாகபோறன்” என்று கதைத்துக்கொண்டிருந்தார்களாம். உள்ளககுருதிப்பெருக்கு என்றால் என்ன? எங்கள் உடலின் குருதிக்குழாய்கள் பாதிப்படைந்து உடற்குழிக்குள் ஏற்படும் குருதிப்பெருக்கை உள்ளக குருதிப்பெருக்கு (Internal bleeding) என்று அழைக்கப்படும். நெஞ்சறையில் காயமேற்படும் போது நுரையீரல்ஃசுவாசப்பைக்கும் நெஞ்சறைச்சுவருக்கும் இடையேயுள்ள புடைக்குழியினுள் குருதிப்பெருக்கு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் போது நுரையீரல் சுருங்கிவிடுவதால் சுவாசச் சிரமம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். இதற்காக ஐ.சி. ரியூப் ஒன்றை விலா எழும்புக்கு இடையினால் உட்செலுத்தி நெஞ்சறையில் உள்ள இரத்தத்தை வெறியேற்றும் போது நுரையீரல் சரியாக வேலை செய்யும். இந்த முறையிலான சிகிச்சையையே முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் எனக்கு வழங்கப்பட்டு உயிர்பிழைக்க வைக்கப்பட்டேன். காயமடைந்தவர்களுக்கு இரத்ததானம் செய்பவர்கள் மிக அரிதாக காணப்பட்டது. காயமடைந்தவர்களின் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர் வழங்கினாலேயொழிய இரத்தம் வழங்க அப்போதைய சூழலில் யாரும் முன்வரமாட்டார்கள். சாப்பாடு இல்லாமல் சளைத்துப்போயிருந்த மக்கள் எப்படி இரத்தங்களை வழங்குவார்கள். இருந்தாலும் ஒரளவு ஆரோக்கியமானநிலையில் இருந்தவர்கள் தாமாகமுன்வந்து இரத்தம் வழங்குவார்கள். எனக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு நான்கு மாற்றுக்குருதி பைக்கற்றுக்கள் வரை ஏற்றப்பட்டிருந்தது. குருதி பலர் எனக்கு தந்தாலும் சிலருடைய குருதி எனக்கு பொருத்தமில்லாதனால் ஏனைய காயமடைந்தவர்களுக்கு ஏற்றப்பட்டது. சண்டை ஒன்றில் இரண்டு கண்களையும் இழந்திருந்த மோகனா அக்கா தான் எனக்கு மிகுதி இரத்தம் தருவதற்கு முன்வந்திருந்தார். மோகனா அக்கா பற்றி ஊடகவியலாளர் மதி விரிவாக எழுதுவார். மதியும் வைத்தியர் ஒருவருமே முள்ளிவாய்க்காலில் பிறிதொரு இடத்தில் வசித்த மோகனா அக்காவிடம் இரத்தம் எடுத்திருந்தனர். இத்தனை பேரின் உழைப்பும் மிககுறுகிய நேரத்தில் எனக்கு கிடைத்தபடியால் தான் நான் இன்று உயிரோடு இருக்கின்றேன். என் உயிரை காப்பாற்ற துடித்தவர்கள் அனைவரும் ஏற்கனவே போர்க்காலங்களில் வலிகளைச் சுமந்தவர்களே! ஒரு பத்திரிகையாளனான என் உயிரை மீட்டதற்காக என்ன நன்றிகடன் செய்யப்போறனோ தெரியவில்லை. 29.04.2009 அன்று மாலை நான்கு மணியளவில் வைத்தியசாலையில் நான் இருந்த கட்டிலின் பின்புறத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். அதன் பிறகு நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினேன். இதுதான் என் காயமடைந்த இரத்த வரலாறு. கிளிநொச்சியில் இருந்து எவ்வாறு ஒவ்வொரு இடங்களாக பத்திரிகையினை வெளியிட்டோம் என்பதை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

No comments