சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை தொடர்பாக கூட்டு எதிரணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அனுராதபுரவில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படுவதற்கு சில குறிப்பிட்ட கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களே காரணம் என்று கூறியுள்ளார். அதேவேளை, கூட்டு எதிரணியின் பேச்சாளரான பந்துல குணவர்த்தன கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கடைசி நேரத்தில் சிறிலங்கா அதிபரே தோற்கடித்து விட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில், மைத்திரிபால சிறிசேன, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்திருந்தால், வெற்றி பெற்றிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சிக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்று நாமல் ராஜபக்சவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment