கண்டியில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தென்ன மற்றும் பூஜாபிட்டிய பகுதிகளிகள் வாணிப நிலையங்கள், மத வழிபாட்டு இடங்களை தீயிட்டு எரித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இரண்டு கோப்ரல் தர இராணுவ அதிகாரிகளை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். புத்தளத்தில் உள்ள 143 பிரிகேட் தலைமையகத்தில் பணியாற்றும், அம்பத்தென்னவைச் சேர்ந்த கோப்ரல் சுபசிங்க முதியான்சலாகே அனுர பண்டார விஜேசிங்க (34) மற்றும் கெக்கிராவவில் உள்ள இயந்திர காலாட்படை ரெஜிமென்ட் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றும் அம்பத்தென்னவை சேர்ந்த கோப்ரல் மல்வானே கெதர ஹசித விஜேரத்ன (38) ஆகிய இரண்டு சிறிலங்கா இராணுவத்தினருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும், பூஜாபிட்டிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பாக தனியான விசாரணை சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் என்றும், அவர்கள் தவறு செய்திருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment