கூட்டமைப்பின் புதிய நாடகத்தொடர் ஆரம்பம்
ரணிலுக்கு எதிரான விடயத்தில் தாம் மீண்டும் சம்பந்தன் மற்றும் சுமந்திரனால்; ஏமாற்றப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் நாடகமொன்றை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.மக்களிடையே மீண்டும் கிடைத்த சந்தர்ப்பமொன்றை தவறவிட்டுவிட்டதாக மக்களிடையே கோபம் கிளம்ப தொடங்கியுள்ளது.இதிலிருந்து தப்பிக்க புதிய நாடகத்தை அரங்கேற்ற கூட்டமைப்பின் வெள்ளையடிக்கும் பிரிவு பணிகளை தொடங்கியுள்ளது.குறிப்பாக தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தனது ஊடகம் மூலம் புதிய கதைகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளார்.
அக்கதையில் ரணிலுடன் எழுத்துமூலமான எந்தவொரு ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் ஆராயப்பட்டது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து அன்றைய தினம் 10 கோரிக்கைகளை கூட்டமைப்பு முன்வைத்திருந்தது. அந்தக் கோரிக்கைகளுக்கு தலைமை அமைச்சர் எழுத்தில் பதில் வழங்கவேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது.
மறுநாள் 4ஆம் திகதி அன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எழுத்துமூலம் பதில் அளித்திருப்பதாகத் தெரிவித்து ஓர் ஆவணத்தை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காண்பித்தார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த நாம் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான பத்து விடயங்களை ரணிலுக்குச் சுட்டிக் காட்டினோம். அதனை அவர் நிறைவேற்றுவதாக கூறினார். ஆனால் இது தொடர்பாக நாம் அவருடன் எழுத்து மூலமான ஒப்பந்தங்கள் எவற்றையும் செய்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவியபோது, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டதாகத் தெரிவித்து ஓர் ஆவணம், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எமக்குக் காண்பிக்கப்பட்டது. அதனை கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனே காண்பித்தார். அதன் பிரதி எமக்கு வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுவது உண்மையாக இருந்தால், சம்பந்தன் எங்களை ஏமாற்றிவிட்டார். இதில் ஏதாவது ஓர் விடயம்தான் உண்மையாக இருக்க முடியும்.
தலைமை அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்த விடயம், அவர் கையெழுத்திட்ட விடயத்தை வெளியில் எந்தக் காரணத்துக்காகவும் கூறவேண்டாம் என்று நாம் கட்சித் தலைமையால் திரும்பத் திரும்ப அறிவுறுத்தப்பட்டோம். இந்த விடயம் தெரியவந்தால், ரணிலுக்கு சிங்களத் தரப்பிலிருந்து சிக்கல் ஏற்படும். ரணில் இதனைச் செய்யா விட்டால், நாம் இதனைப் பகிரங்கப்படுத்துவோம் என்று கூட்டமைப்புத் தலைமையினர் கூட்டத்தில் எமக்குத் தெரிவித்தனர். எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்துக்கு முன்னதாகவே இதில் பெரும்பாலான விடயங்கள் செய்து முடிக்கப்படும் என்றும், தலைமையினால் எமக்குத் தெரிவிக்கப்பட்டது – என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
Post a Comment