என்னில் நம்பிக்கை இல்லை எனில் வேறு ஒரு நீதிபதியை நியமித்து தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை நடத்துங்கள் என்று விசனித்தார் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன்.
தமிழ் அரசியல் கைதிகள் மூவருடைய வழக்கு நேற்று வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
வவுனியாவைச் சேர்ந்த அரச சட்டத்தரணி எஸ்.சி.பகீம் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு மாற்ற வேண்டும் என்று மன்றில் கோரினார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி வராததைக் காரணம் காட்டியே வழக்கை திகதி மாற்ற வேண்டும் என்று அவர் கோரினார். அப்போதே நீதிபதி சசிமகேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“தமிழ் அரசியல் கைதிகளுடைய வழக்கு விசாரணைகள் வெவ்வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுகிறது. தற்போது விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. என்னில் நம்பிக்கை இல்லை என்றால் இந்த வழக்குக்கு வேறு ஒரு நீதிபதியை நியமித்து வழக்கை நடத்துங்கள்”- என்று அவர் குறிப்பிட்டார்.
அரச சட்டத்தரணி கேட்டுக் கொண்ட திகதியன்று கட்டாயம் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் இடம்பெறும் என்றும் உத்தரவிட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணைகள் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னர் அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.
தமது வழக்குகளை மீண்டும் வவுனியவுக்கு மாற்றுமாறு கோரி மதியரசன் சுலக்சன், இராசதுரை திருவருள், கனேசன் தர்சன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளும் உணவு ஒறுப்புப் பேராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு வவுனியாவுக்கு மாற்றப்பட்டது.
0 கருத்துகள்:
Post a Comment