கிளிநொச்சி, பரந்தன் ஆகிய நகர்களை உள்ளடக்கிய கரைச்சிப் பிரதேச சபையின் ஆட்சியைத் தீர்மானிப்பதற்கான பலப்பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. உள்ளுராட்சித் தேர்தலில் கரைச்சிப் பிரதேச சபையில் தனிப்பெரும்பான்மைப் பலத்தோடு ஆட்சியமைப்பதற்குரிய பலத்தை எந்தவொரு கட்சியும் கொண்டிருக்கவில்லை. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்டிக்கும் கரைச்சிப் பிரதேச சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 17 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது. எதிர்த்தரப்பிலுள்ள 18 உறுப்பினர்களில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேச்சைக் குழுவினர் 11 ஆசனங்களையும் தமிழ்த் தேசியப் பேரவை இரண்டு உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு ஆசனங்களையும் ஐ.தே.க, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன முறையே ஒவ்வொரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான 18 உறுப்பினர்கள் அடங்கிய எதிர்த்தரப்பினர், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பிற்குள்ளும் தலைவராகத் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உறுப்பினரை அங்கீகரிப்பதில் ஏனைய உறுப்பினர்களிடத்தில் குழப்ப நிலை காணப்படுகிறது. கிளிநொச்சி நகரை வளப்படுத்தக் கூடிய ஆளுமை மிக்க ஒருவரையே தாம் விரும்புவதாகவும் மக்களால் நன்மதிப்பு மிக்க ஒருவரை நியமிக்குமாறு தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள கரைச்சிப்பிரதேச சபைக்கான தவிசாளர், உதவித்தவிசாளர் தெரிவுகள் பலத்த போட்டியின் மத்தியிலேயே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment