தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உரிமத்தை புதுப்பிக்கக்கோரி ஆலை நிர்வாகம் அளித்த விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்துள்ளது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 30.10.1994 அன்று அனுமதி அளித்தார். கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆலைக்கு தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு வழங்கியது. தொடர்ந்து கடந்த 14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் தாமிரம் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. கடந்த 1996 இறுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தற்போது ‘யூனிட் 2’ என விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் இந்த விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள 9 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், மடத்தூர், சில்வர்புரம், தபால் தந்தி காலனி, முருகேசன் நகர், தெற்கு வீரபாண்டியாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் சுமார் 58 நாட்களை தாண்டி நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான ‘கன்சர்ன் டு ஆப்பரேட்’ எனப்படும் தடையின்மை சான்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆண்டுதோறும் வழங்க வேண்டும். இந்தச் சான்று கடந்த மாதம் 31ம் தேதியே காலாவதியானது. இதை புதுப்பிக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் தொழிற்சாலை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தது. மறுபுறம் போராட்டம் வேறு உக்கிரம் அடைந்தது. இந்த நிலையில், தடையின்மை சான்று கிடைக்காததால் ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் கடந்த மாதம் 25ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையின்மை சான்று வழங்காமல் ஸ்டெர்லைட் ஆலை விண்ணப்பத்தை திரும்ப அனுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் முகமது நசிமுத்தின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு 1ஐ கடந்த மார்ச் 31ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து நடத்த விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த ேபாது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அக் குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை. இந்த காரணத்தால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் விண்ணப்பத்தை நிராகரித்ததால் கடந்த மாதம் 25ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆலை பராமரிப்பு பணிகள் மேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் பல ஆலைகள்தூத்துக்குடி புறநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பல்று தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகள், தனியார் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பெரும்பாலான ஆலைகளுக்கு இந்த ‘சிடிஓ’’’’ எனப்படும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தடையின்மை சான்று புதுப்பிக்கப்படாமலேயே உள்ளது. குறிப்பாக மத்திய அரசு நிறுவனங்களுக்கு கூட இந்த சான்றிதழ் கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்கபடாமல் இயங்கி வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment