Header Ads

test

தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்தால் 6 மாகாணசபைகளுக்கு இவ்வருட இறுதியில் தேர்தல்!

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டால், இவ்வருட இறுதிக்குள் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தமுடியுமெனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, “அந்தக் கோரிக்கையை, சகல கட்சிகளின் செயலாளர்களிடமும் விடுக்கவுள்ளேன்” என்றார்.

ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், 

“சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை, நாளை (இன்று) சந்திக்கவுள்ளேன். அதன்போது, இந்தக் கோரிக்கையை முன்வைப்பேன்” என்றும் தெரிவித்தார்.

“மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்ற கருத்துகள் வலுப்பெற்றுள்ளன. தேர்தலை நடத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். அவசர அவசரமாக, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்தமையால் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்” என்றார்.

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று 2002ஆம் ஆண்டு தொடக்கம் பேச்சப்பட்டு வந்த போதிலும் 2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்கச் சட்டத்தின் ஊடாக உள்ளூராட்சித் தேர்தல் முறையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இருப்பினும், அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாது போனது.

“அத்துடன், தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு மக்கள் ஆணையும் உள்ளது. அதனால் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்புத் தெரிவிக்காது” என்றார்.

“அத்துடன், எல்லை நிர்ணய அறிக்கைக்கு, அமைச்சரவை அங்கிகாரத்தைப் பெற்று நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றித்தருவார்களாயின் இன்னும் மூன்று மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம். 

“தேர்தலை நடத்த வேண்டுமாயின் அதற்கு நான்கு தெரிவுகள் உள்ளன. தேர்தல் முறைமையை மாற்றிப் புதிய தேர்தலை நடத்துதல், 50க்கு ஐம்பது முறைமையை மாற்றியமைத்தல், நடைமுறையிலிருக்கும் முறையிலேயே தேர்தலை நடத்துவது, போன்ற நான்கு தெரிவுகளில் ஒன்றைப் பின்பற்றித் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

“எல்லை நிர்ணய அறிக்கையானது மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்ற முடியாவிடின், பிரதமர் தலைமையில் நியமிக்கப்படும் குழுவினால் அறிக்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும். மீண்டும் பழைய முறைமையில் தேர்தலை நடத்தும் சட்ட திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும். இவற்றுக்கு நாடாளுமன்ற அங்கிகாரம் அவசியப்படுகின்றது” என்றார்.

“மேற்படி செயற்பாடுகள் பூர்த்தியாகின்ற ஒக்டோபர் மாதமளவில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாண சபைகள் கலைக்கப்படும். இவற்றுடன் ஏற்கெனவே கலைக்கப்பட்டுள்ள கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாண சபைகளையும் இணைத்து மொத்தமாக 6 மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒக்டோபர் மாதம் நடத்த முடியும். எனவே, அதற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் செய்து தரப்படுமாயின் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த தயாராகவே உள்ளது” என்றார். 

No comments