Header Ads

test

இரு தசாப்தங்களின் பின் பூர்வீக நிலத்தில் மேதினக் கொண்டாட்டங்கள்!

இரணைதீவு மக்கள் 26 வருடங்களின் பின் தமது சொந்த மண்ணில் தொழிலாளர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடியுள்ளனர். தமது பூர்வீக மண்ணில் விசேட வழிபாடுகளுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரணைதீவு மக்கள் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன்போது நீச்சல், படகோட்டம், கிடுகு பின்னுதல், மட்டிபொறுக்குதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் இரணைதீவு மக்கள் ஈடுபட்டதுடன், அதில் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.
தமது பூர்வீக மண்ணில் 26 வருடங்களின் பின்னர் இவ்வாறு விளையாட்டுக்கள், வழிபாடுகளின் ஊடாக தொழிலாளர் தினத்தினை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாக இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது கிராமவாசியான ஜோன் கெனடி கருத்துத் தெரிவிக்கையில், ‘நான் எனது 12 வயதிற்குப் பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாள் இதுதான். விரைவில் நாம் எமது சொந்த மண்ணில் மீள்குடியேறி சுதந்திரக் காற்றினைச் சுவாசிப்பதற்கு இந்த அரசாங்கம் வழியேற்படுத்தித் தரவேண்டும்.
கடந்த வருடம் இதே நாளில் நாம் ஆரம்பித்த போராட்டத்திற்கு இன்று நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே இந்த தொழிலாளர் தினத்தில் நாம் மிகவும் மகிழ்வுடன் இருக்கின்றோம். நாம் மிகவும் எதிர்பார்ப்புக்களுடன் வந்திருக்கின்றோம். விரைவில் நாம் இங்கு மீள்குடியேறுவதற்கு ஆவலாக இருக்கின்றோம்.

இந்த ஊடகங்கள் மூலம் எமது பிரச்சினைகள் வெளி உலகிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் எமது மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் கருத்திற் கொள்ளப்படும் என நாம் எதிர் பார்க்கின்றோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments